ஆவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் வாகன சோதனையில் 1381 கிலோ தங்கம் சிக்கியது
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வேப்பம்பட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது 2 வேன்களில் கொண்டுவரப்பட்ட 1,381 கிலோ தங்க கட்டிகள்,நகைகள் சிக்கியது.
தமிழகத்தில் நாளை மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் இன்று மாலை நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள வேப்பம்பட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டியிருந்தனர். அப்போது அந்த சாலையில் வந்த 2 வேன்களை அதிகாரிகள் சோதனையிட்டனர்.வேன்களை சோதனையிட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வேன்களில் மொத்தம் 1,381 கிலோ தங்க கட்டிகள், நகைகள் இருந்தது. மேலும் வேன் டிரைவர்களிடம் தங்கத்துக்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை.இதனையடுத்து அந்த வேன்களை பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். பின் வேனில் வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த தங்க கட்டிகள் சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், திருப்பதி தேவஸ்தானுக்கு கொண்டு செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் வாகன சோதனையில் 1,381 கிலோ தங்கம் சிக்கியது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.