மோடியை எதிர்த்து போட்டியில்லை மாயாவதி கட்சிக்கு ஆதரவு - பல்டி அடித்த பீம் சேனா தலைவர்
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்த பீம் சேனா என்ற தலித் அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் திடீரென மாயாவதி கட்சிக்கு ஆதரவு என பல்டி அடித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2017-ல் தலித்களுக்கும் உயர் சாதி தாகூர் வகுப்பினருக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்திற்கு காரணம் என்று கூறப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி 16 மாதங்கள் சிறையில் இருந்தவர் பீம் சேனா என்ற தலித் இயக்கத்தின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் .
தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்து சர்ச்சையைக் கிளப்பினார். ஆசாத் போட்டியிட்டால் தலித்கள் வாக்கு சிதறும். இது மோடிக்குத் தான் சாதகம் என்று கூறிய மாயாவதி, சந்திரசேகர் ஆசாத்தை பாஜகவின் பி டீம் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். ஏற்கனவே ஆசாத்துக்கும் மாயாவதிக்கும் பல ஆண்டுகளாக ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. அகிலேஷ் யாதவையும் கடுமையாக விமர்சித்தும் வந்தார் ஆசாத்.தற்போது தன்னை பாஜகவின் பிடீம் என மாயாவதி விமர்சித்ததால் அப்செட்டாகி விட்ட ஆசாத், திடீரென பல்டி அடித்துள்ளார்.
ஆமாம், மாயாவதி சொல்வதும் உண்மைதான். மோடியை தோற்கடிக்க வேண்டுமானால் சமாஜ்வாதி - பகுஜன் கூட்டணியை ஆதரிப்பது தான் நல்லது என்று கூறி, பழைய பகையை எல்லாம் ஓரம் கட்டி விட்டு மாயாவதி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் உயர் ஜாதி பிராமண வகுப்பைச் சேர்ந்த மாயாவதி கட்சியின் பொதுச் செயலாளரான சதீஷ் சந்திர கிஷோரை வேட்பாளராக நிறுத்தினால் மோடியை எளிதாக வீழ்த்தி விடலாம் என்ற யோசனையையும் மாயாவதிக்கு கூறியுள்ளார்.