இந்தியன் 2 ஒப்பந்தங்களால் திணறும் ஷங்கர்... கண்டுக்கொள்ளாத கமல்

ரஜினியை 2.O படத்தின் மூலம் இயக்கி முடித்த கையோடு, கமல்ஹாசனை இந்தியன் 2 படத்துக்காக இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

லைகா நிறுவனம் தயாரிப்பில், கடந்த ஜனவரி 18ஆம் தேதி சென்னை மெமோரியல் ஹாலில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நான்கு நாட்கள் மட்டுமே நீடித்த படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டது. கமலுக்கு படத்தில் ஒப்பனை சரியாக வரவில்லை என்பதும், மக்களவைத் தேர்தலில் கமல் கவனம் செலுத்த தொடங்கியதும் ஆகும். இந்த காரணங்கள் மட்டுமின்றி, கமலின் ஒப்பனைக்கு அதிக செலவுபிடிக்கும் என்று சொல்லப்படுகிறது. சொன்ன பட்ஜெட்டுக்கு மேல் செலவாகும் என்பதை அறிந்த லைகா நிறுவனம் பெரும் அதிர்ச்சியடைந்தது. ஷங்கர் படங்களில் ஆகும் செலவுகள் ஊரறிந்த ஒன்றே. இந்த முறை லைகா சுதாரித்துக் கொண்டது. என்னவென்றால், சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடிப்பேன் என்றும், பட்ஜெட் அதிகமானால் தாம் பொருப்பேற்பதாகவும் ஷங்கரிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டது லைகா. இதுவரை ஷங்கர் இயக்கிய 13 படங்களிலும் எந்த கையொப்பமும், கமிட்மெண்டும் இன்றி இஷ்டத்துக்கு படம் எடுத்தவர் ஷங்கர். இந்த விஷயமே ஷங்கரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், அடுத்து ஒரு சர்ச்சை நிகழ்ந்திருக்கிறது. என்னவென்றால், படத்தை எப்பொழுது முடிப்பீர்கள் என்று கேட்டதுக்கும் பிடி கொடுக்காமல் நழுவியிருக்கிறார் ஷங்கர். அதனால், வெள்ளியீட்டுத் தேதி ஒன்றை குறிப்பிட்டு அதற்குள் படத்தை முடித்து தரவேண்டும் என்று மற்றுமொரு ஒப்பந்தத்தை தயார் செய்து வைத்திருக்கிறது லைகா. அதிலும் ஷங்கரை கையெழுத்து போட்டுத் தரும்படி கேட்டு வருகிறது. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார் ஷங்கர். கமல் படத்தால் இன்னும் என்னவெல்லாம் பிரச்னைகளை ஷங்கர் அனுபவிக்க இருக்கிறாரோ தெரியவில்லை. இந்நிலையில் படம் மீண்டும் டிராப் என்கிற செய்தியும் பரவி வருகிறது. ஆனால் இந்தியன் 2 உருவாவதில் நிஜ சிக்கல் இந்த ஒப்பந்த விவகாரம்தான்!

More News >>