தேர்தல் நடத்த இயலாத சூழல் உள்ள தொகுதிகள் எவை..? பட்டியல் கேட்ட தேர்தல் ஆணையம் - எதிர்க்கட்சிகள் கலக்கம்

தமிழகத்தில் தேர்தல் நடத்த இயலாத சூழல் உள்ள தொகுதிகள் எவை? எவை? என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விடிவதற்குள் வேறு ஏதேனும் அதிரடி அறிவிப்புகள் வெளியாகப் போகிறதா? என்று எதிர்க் கட்சிகளை மேலும் கலக்கமடையச் செய்துள்ளது தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனின் ஆதரவாளர்களின் இடங்களில் நடந்த சோதனையில் ரூ.11 கோடிக்கு மேல் பணம் சிக்கியதையடுத்து அத்தொகுதியில் தேர்தலை கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம் .

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு வெளியான ஓரிரு மணி நேரத்திற்குள் தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அதே போல் தேனி மாவட்டம் ஆண்டிUட்டியில் அமமுக தேர்தல் அலுவலகத்தில் நேற்று இரவு தொடங்கி காலை வரை நடைபெற்ற சோதனையில் சுமார் ரூ.1.48 கோடி கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது..இன்று மாலை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சுப்ரமணியனுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் தோட்டத்தில் நடைபெற்ற சோதனையில் ரூ.43 லட்சம் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் தான் தமிழகத்தில் தேர்தல் நடத்த இயலாத சூழல் உள்ள தொகுதிகள் எவை? எவை? என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி திமுக உள்ளிட்ட எதிர்த்தரப்பு கட்சிகளுக்குபதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் குவிந்ததும், சமூக வலைத்தளங்களிலும் பணப்பட்டுவாடா வீடியோக்கள் வெளியாகியும் வருவதே தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அவசர, அவசரமாக ஒப்புக்கு அறிக்கையைப் பெற்று, அதன் அடிப்படையில் விடிவதற்குள் ஏதேனும் அதிரடி நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்கப் போகிறதோ என்ற கலக்கமும் அரசியல் கட்சிகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

More News >>