சிலி நாட்டில் வீட்டின் மீது விமானம் நொறுங்கி விழுந்ததில் பெண்கள் உள்பட 6 பேர் பரிதாப பலி
சிலி நாட்டில் வீட்டின் மீது விமானம் நொறுங்கி விழுந்ததில் பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலி நாட்டின் தெற்கு பகுதியில் லோஸ் லாகோஸ் பிராந்தியத்தில் உள்ள பியூர்ட்டோ மோண்ட் என்ற இடத்தில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
இதில் ஒரு விமானியும், 2 பெண்கள் உள்பட 5 பயணிகளும் பயணம் செய்தனர். புறப்பட்டு சென்ற சில நொடிகளில் விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் அந்த விமானம் ஒரு வீட்டின் மேல் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அதனை தொடர்ந்து, விமானத்தின் எரிபொருள் கசிந்து தீப்பிடித்தது. இதில் விமானம் மற்றும் அந்த வீடு முற்றிலும் எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
விமானம் விழுந்து நொறுங்கிய வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெரிய அளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக விபத்து நேரிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.