தென்கொரியாவில் மனநலம் பாதித்தவர் நடத்திய கொடூர தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி
தென்கொரியாவில் மனநலம் பாதித்தவர் நடத்திய கொடூரமான கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலியாகினர்.
தென்கொரியாவின் ஜியோங்சங் மாகாணத்தில், ஜின்ஜூ நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் வசித்து வந்த 42 வயதான நபர் ஒருவர் நேற்று காலை தனது வீட்டுக்கு தானே தீவைத்தார். பின் கத்தியுடன் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர், 2-வது தளத்துக்கு சென்று நின்றார்.
இதற்கிடையில், அவரது வீட்டில் வைக்கப்பட்ட தீ, அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பரவியது. இதனால் அந்த வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு கீழே ஓடிவந்தனர். அப்போது, அவர்களை 2-வது தளத்தில் நின்று கொண்டிருந்த அந்த நபர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்தனர். பின்னர் 4-வது மாடியில் எரிந்த தீயை அணைத்தனர். அதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபரை சுற்றிவளைத்த போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
போலீசாரிடம் அவர் தனக்கு சம்பளம் கிடைக்காத விரக்தியில் இப்படி செய்ததாக போலீசாரிடம் கூறினார். ஆனால் வேலை எதுவும் பார்க்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என சந்தேகிக்கும் போலீசார், அந்த கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.