பர்கூரா, திருமங்கலமா? தீர்ப்பு எழுதும் மக்கள்!!

தமிழகத்தி்ல் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள். தேர்தல் முடிவு பர்கூராக இருக்குமா அல்லது திருமங்கலமாக இருக்குமா என்ற பலத்த எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தி்ல் 39 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தொடங்கியதால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக ஆரம்பமானது. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு, வாக்குப்பதிவு தடைபட்டது. பல ஊர்களில் வாக்குப்பதிவு தொடங்கவே தாமதம் ஏற்பட்டது. இந்த தேர்தலில், அ.தி.மு.க.-பா.ஜ. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றுமா, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறுமா, துணிச்சலுடன் தனியாக களமிறங்கியுள்ள டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. வெற்றி பெறுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இடைத்தேர்தல்கள் நடைபெறும் 18 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் வீதம் பட்டுவாடா செய்து விட்டதாக கூறப்படுகிறது. அதே போல், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது. தினகரனின் அ.ம.மு.க.வும் பல தொகுதகளில் 300 ரூபாய் வரை பட்டுவாடா செய்திருப்பதாக தெரிகிறது.

இந்த சூழலில், மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது புதிராகவே உள்ளது. கடந்த 1996ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. மீது மக்கள் கடும் ஆத்திரத்தில் இருந்தனர். அதற்கு, உலக மகா ஊழல்கள், பல கோடி செலவில் வளர்ப்பு மகன் திருமணம், எதேச்சதிகாரம் என்று பல காரணங்கள் உண்டு. அந்த தேர்தலில் பர்கூர் சட்டசபைத் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டார்.

அப்போது அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டது. இதனால், பர்கூரில் இருந்து தினமும் 3 பஸ்களில் மக்களை போயஸ் கார்டனுக்கு அழைத்து வந்து ஜெயலலிதாவே நேரடியாக பல பரிசுகளை வழங்கினார். மேலும், பர்கூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணமும் அள்ளி தரப்பட்டது. ஆனால், அதற்கெல்லாம் மக்கள் மசியவே இல்லை. அப்போது முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க.வி்ல் டம்மி வேட்பாளர் போல் சுகவனம் என்ற நடுத்தரக் குடும்பத்து இளைஞரை நிறுத்தியிருந்தனர்.

அந்த சுகவனம், ஜெயலலிதாவையே வெற்றி பெற்றார். 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சுகவனத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைத்து பத்திரிகையாளர்களுக்கு முன்னிலையில் நிறுத்தினார். வெற்றிக் களிப்பில் பேட்டியளித்த கருணாநிதி, ‘இதுதான் யானையின் காதில் புகுந்த எறும்பு’ என்று சுகவனத்தை அறிமுகப்படுத்தினார்.

இதே போல், இன்னொரு இடைத்தேர்தல் தமிழகத்தில் புகழ் பெற்றது. அது 2009 ஜனவரியில் நடைபெற்ற திருமங்கலம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல். இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மு.க.அழகிரி பொறுப்பேற்றிருந்தார். அப்போது அவர், அந்த தொகுதியில் உள்ள அ.தி.மு.க.வினரையும் அழைத்து, ‘இந்த இடைத்தேர்தலில் மட்டும் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்’ என்று கூறி பணப்பட்டுவாடா செய்தார். தொகுதியில் அத்தனை வீடுகளும் கணக்கெடுக்கப்பட்டு, துல்லியமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. தி.மு.க.வின் தீவிர விசுவாசிகள் தவிர மற்றவர்கள் பணத்தை பெற்று கொண்டு வாக்களித்தார்கள். அப்போது 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று அழகிரி சொன்னார். அதே 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான் வெற்றி பெற்றார்.

தற்போது நடைபெறும் தேர்தலில் மக்களின் முடிவு எப்படி இருக்கும்? எவ்வளவு அள்ளிக் கொடுத்தாலும் எங்களுக்கு மோடி-எடப்பாடி ஆட்சிகள் மீது கோபம் உள்ளது என்று கூறி, பர்கூரைப் போல் முடிவெடுப்பார்களா? அல்லது ஓட்டுக்கு 2 ஆயிரம் வீதம் வீட்டுக்கு 10 ஆயிரத்துக்கு மேல் வாங்கி விட்டோமே, அதனால் ஆளும்கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என்று முடிவெடுப்பார்களா?

காத்திருப்போம் மே 23ம் தேதி வரை!!

More News >>