புயலால் தங்கச் சுரங்கத்திற்குள் சிக்கிய 950 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு
கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அடுத்து, தங்கச் சுரங்கத்தில் சிக்கித் தவித்த 950 தொழிலாளர்களை 2 நாட்களுக்குப் பின் மீட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் வெல்கோம் நகரின் அருகே தெனிசென் என்கிற சிறிய நகரம் உள்ளது. இங்கு, 23 நிலைகளைக் கொண்ட சுரங்கம் தரைமட்டத்தில் இருந்து 1000 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. இங்கு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த வார நாட்களில், இந்த பகுதியில் கடுமையாக புயல் வீசியது. இதனால், சாலை எங்கும் மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதன் எதிரொலியாக, தங்க சுரங்கத்தில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென மின்சாரம் தடைபட்டது.இதனால் இருளில் மூழ்கிய சுரங்கத்தில் இருந்து வெளியில் வர முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டனர்.
தொழிலாளர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அனைவரும் சுரங்கத்தின் அருகில் திரண்டனர். அவர்களை சுரங்க வாயில் அருகே செல்ல வேண்டாம் எனவும் பாதுகாவலர்கள் அறிவுறுத்தினர்.
சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்களுக்கு என்ன நேர்ந்தது என தெரியாமல் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டதால் மேலும் பரபரப்பு கூடியது.
இதைதொடர்ந்து, தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று காலை மின் இணைப்பு கொடுக்கப்பட்டதை அடுத்து, தொழிலாளர்கள் அனைவரும் எவ்வித பாதிப்புமின்றி மீட்கப்பட்டனர்.