அவசரத்துக்கு ஒதுங்கியது ஒரு குற்றமா?: இதுக்கெல்லாமா ஜி.எஸ்.டி போடுறது?
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறைக்கே இன்னும் பல விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் ‘இது’க்கெல்லாமா ஜி.எஸ்.டி என வியக்க வைக்கிறார்கள் நம் மக்கள்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில், சேலத்தை நோக்கிச் செல்லும் பைபாஸ் சாலையோரம் அமைந்துள்ள ஓர் ஹோட்டலில், ஒருவர் டாய்லெட் பயன்படுத்தியதற்காக அவருக்கு ஜி.எஸ்.டி உடன் இணைந்த டாய்லெட் பில் வழங்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக பயணங்களின் நடுவே நமக்கு பொதுக்கழிப்பறை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் பெட்ரோல் பங்க், சாலையோர ஹோட்டல்களில் உள்ள பொதுக்கழிப்பறையை பயன்படுத்துவது வழக்கம். இதற்காக அதிகப்பட்சம் 5 ரூபாய் வரை வசூலிக்கப்படுவது வாடிக்கை.
ஆனால், பெருந்துறையில் உள்ள ஓர் ஹோட்டலில் டாய்லெட் பயன்படுத்தியதற்காக ஒருவரிடம் 10 ரூபாய் வசூல் செய்த அந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் அதற்கு ஜி.எஸ்.டி உடன் கூடிய விவரமான பில் வழங்கி அசத்தியுள்ளனர்.
அந்த விவரமான பில், டாய்லெட் பயன்பாட்டுக்கு 10 ரூபாய் என்றும் பார்செல் 50 பைசா என்றும் ஜி.எஸ்.டி 50 பைசா என்றும் பட்டியலிட்டுள்ளனர்.
‘உலகத்தில் உள்ள அத்தனை அறிவாளியும் நம்ம ஊர்லதான் இருக்காங்க போல’!