ஜனநாயக திருவிழாவோடு, சித்திரை திருவிழாவையும் சேர்த்து கொண்டாடிய மதுரை மக்கள்.
மதுரையில் சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவின் 11ம் நாளான இன்று தேரோட்டம் சிறப்பாக நடந்தது. அதேபோல் இன்று அங்கு ஜனநாயக திருவிழாவான தேர்தலும் சிறப்பாக நடந்து வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று சிறப்பாக நடந்தது. திருவிழாவின் 11-ம் நாளான இன்று தேரோட்டம் காலை 5.30 மணிக்கு தொடங்கியது. இதற்காக கீழமாசி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தேர்களில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் தேரில் எழுந்தருளினர். தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் ரதவீதிகளில் குவிந்தனர்.
தீபாராதனைக்கு பிறகு காலை 5.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் சுவாமி சுந்தரேசுவரர், பிரியாவிடையுடன் உள்ள பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மங்கள வாத்தியங்கள், மேளதாளம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வருவது போல் வந்தது.
பெரிய தேர் புறப்பட்ட சிறிது நேரத்தில் , மீனாட்சி அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு வாக்காளர்கள் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்வதற்கு வசதியாக இன்று மதுரையில் மட்டும் வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.