கடமையை செய்தது தப்பா? மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்தவர் சஸ்பெண்ட்!
மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.
ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக நாடு தழுவிய அளவில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் வகையில், பிரதமர் மோடி கடந்த செவ்வாய்கிழமை அன்று ஒடிசா மாநிலம் சம்பால்பூரில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார். அப்போது, மோடி வந்து இறங்கிய ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர். பிரதமரின் சிறப்புப் பாதுகாவலர்கள் தடுத்த நிலையிலும் இந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இந்தியாவின் பிரதமராக இருப்பவருக்கு என்.எஸ்.ஜி பாதுகாப்பு வழங்கப்படும். இவர்களின் அனுமதியின்றி பிரதமரிடம் சோதனை நடத்தக் கூடாது. இந்நிலையில், சாம்பல்பூரில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய முகமது மோசின் என்பவர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்தார். இந்த சோதனையால், மோடியின் பயணம் 15 நிமிடம் காலதாமதமானது.
இதனையடுத்து, அம்மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், நடத்திய விசாரணையில், தேர்தல் ஆணையத்தின் விதியை மீறி சோதனை செய்ததாக முகமது மொஹ்சினை, தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்து, நடவடிக்கை எடுத்துள்ளது.
மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ததுபோல் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோரிடம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.