அதிமுகவில் விஜயகாந்த்திற்கு 4 சீட் தேர்தல் ஆணையத்துக்கு 2 சீட் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்
அதிமுக கூட்டணியில் தேர்தல் ஆணையத்துக்கு சீட் கொடுத்திருப்பார்கள் என கிண்டல் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய வாக்கைப்பதிவு செய்தார்.
அதன் பின், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், ‘வாக்குப்பதிவு இயந்திரங்களில் எப்போதும் சின்ன சின்ன புகார்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. இத்தகைய புகார்கள் வராமல் இருக்கத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதை எனது கோரிக்கையாகவும் முன்வைக்கிறேன். இந்த தேர்தலில் என்றும் காணாத அளவில் மக்கள் எழுச்சியாக வாக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக நேற்றைய தினம் கோயம்மேடு பஸ் நிலையத்தில் சொந்த ஊர் சென்று வாக்களிக்கப் பொதுமக்கள் பேருந்திற்காக அலைமோதிய காட்சியை பார்த்தோம். நிச்சயமாகச் சொல்கிறேன் ஒரு பாஸிட்டிவ் ரிசல்ட் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்று பேசிய அவர்,
வேலூர் தொகுதியில் உண்மையாக வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால் தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டு என்றால், முதலில் தேனி தொகுதியில்தான் தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு 4 சீட் கொடுத்திருக்கிறார்கள், அதேபோல், தேர்தல் ஆணையத்துக்கு 2 சீட் கொடுத்திருப்பார்கள்’ என்றார்.