சுந்தர் பிச்சை வாக்களிக்க தமிழகம் வந்தாரா? - டுவிட்டரை அலறவைத்த இணையவாசிகள்
சுந்தர் பிச்சை தமிழகத்துக்கு வாக்களிக்க வந்ததாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி தவிர, மேற்குவங்காளம், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா உட்பட 10 மாநிலங்களில், பெரியளவில் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி, இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இருப்பினும் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தமிழகத்தில் தற்போதையை நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவாகி உள்ளன.
இதற்கிடையே கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து வாக்களித்ததாகவும் அவர்களில் பலர் புகைப்படம் ஒன்றை பதிவிட்டனர். இது வைரலாக பரவியது. ஆனால் அந்த புகைப்படம் உண்மையானது அல்ல. சுந்தர் பிச்சை இப்போது அமெரிக்கா குடிமகன். இந்தியாவில் இரட்டைக் குடியுரிமையும் கிடையாது, இதனால், அவர் இங்கு வாக்களிக்கும் உரிமையே கிடையாது என்பதுதான் உண்மை. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் அவர் கடந்த 2017-ம் ஆண்டு கரக்பூர் ஐஐடிக்கு வந்த போது எடுத்த படம். தான் படித்த ஐஐடிக்கு அவர் வந்திருந்தபோது அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. தனது ட்விட்டரில் அவரே அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை தான் அவர் வாக்களிக்க வந்ததாக கூறி புகைப்படங்களை பரப்பிவிட்டனர் இணையதளவாசிகள்.