அதிமுகவில் இருந்து எடப்பாடி அவுட்
சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை நீக்கி அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் உத்தரவிட்டுள்ளார். பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலுடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி என இரு அணிகளாக பிரிந்துகிடந்த அதிமுக அண்மையில் ஒருங்கிணைந்தது. தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கப் போவதாக சொல்லப்பட்டது. இதனால், டிடிவி தினகரன ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரியில் முகாமிட்டனர். அங்குள்ள தனியார் ரிசர்ட்டில் அவர்கள் தங்கியிருந்தனர். தற்போது நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேரும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் முதல்வரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் கடிதம் கொடுத்தனர்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 27-ம் தேதி) சேலம் புறநகர் செயலாளர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமியை விடுவித்து டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.