யாருக்கு எவ்வளவு ஓட்டு..?- இனி 34 நாட்களுக்கு கூட்டல்,கழித்தல் கணக்கு தான் போங்க
ஒரு வழியாக தமிழகத்தில் ஒரு மாதத் துக்கும் மேலாக நடந்த தேர்தல் திருவிழா ஆரவாரமாக முடிவடைந்துள்ளது. ஆரம்பத்தில் யார்? யாருடன் கூட்டணி என்பதற்காக நடந்த திரை மறைவு ரகசிய பேச்சுகள், அதன் பின்னணியில் நடந்த பேரங்கள் என தமிழக அரசியல் களம் சினிமாவை மிஞ்சும் வகையில் நாளுக்கு நாள் திடீர், திடீர் திருப்பங்களை சந்தித்து ஒரு வழியாக கூட்டணி முடிவானது.
எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் வாரிசுகள், பெரும் தொழிலதிபர்கள், பிரபலங்கள் என விஐபிக்கள் பலர் போட்டியிட்டதால் தேர்தல் களம் படு சூடாகவே காணப்பட்டது. கூடவே 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடத்தப்பட்டதால், ஆளும் அதிமுக தரப்புக்கு வாழ்வா? சாவா? போராட்டமாகி விட்டது இந்தத் தேர்தல். திமுகவும் 18 தொகுதிகளையும் மொத்தமாக அறுவடை செய்து விட்டால் ஆட்சியையே கைப்பற்றி விடலாம் என்ற மனக்கணக்கு போட்டு களமிறங்கியது.
இதனால் இடைத் தேர்தல் நடந்த 18 தொகுதிகளிலும் திமுகவும், அதிமுகவும் நேரடிப் போட்டியைச் சந்தித்து, இந்தத் தொகுதிகளில் ஸ்பெஷல் கவனிப்புகளில் இரு கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டதால் தேர்தல் களம் அதகளப்பட்டது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் பணம் தான் எல்லாவற்றுக்கும் பிரதானமாகி விட்டதால் கோடிகள் தாராளமாக புழங்கியது கண்கூடாகத் தெரிந்தது. ஆளும் கட்சித் தரப்பில் தமிழகம் முழுக்கவே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா வெகுஜரூராக நடைபெற்றதை யாராலும் மறுக்க முடியாது. மக்களவைத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் என்றால் வாக்குக்கு 500 ரூபாய் முதல் 1000 , கூட்டணிக் கட்சி வேட்பாளர் என்றால் 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை என வாரி இறைக்கப்பட்டது. இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளில் குறைந்தபட்சமே ௹ 2000 தானாம். இந்தப் பட்டுவாடாவை பகிரங்கமாகவே நடத்தி முடித்த ஆளும் தரப்பு கடைசிக் கட்டத்தில் எதிர்த்தரப்புக்கு அதிகாரிகள் மூலம் கொடுத்த நெருக்கடி தான் அவர்களை கிடு கிடுக்க வைத்துவிட்டது எனலாம்.
திமுக கூட்டணித் தரப்பிலும் கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடா நடத்த திட்டமிட்டுள்ளதை மோப்பம் பிடித்து அதிகாரிகளை ஏவி விட்டு ரெய்டு நடத்தப்பட்டது. இதற்கு துரைமுருகன் தரப்பில் வேலூர் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட பணமும், அதனால் அத்தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதும் ஒரு உதாரணமாகும். இதனால் ஆளும் கட்சித் தரப்பின் அச்சுறுத்தலுக்கும், நெருக்கடிக்கும் ஆளான திமுக தரப்பு ஓரிரு தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் கடைசி நேர பூத் செலவுக்குக் கூட பணத்தை நகர்த்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.
இந்நிலையில் தான் ஓரிரு அசம்பாவிதங்கள் தவிர்த்து, தேர்தல் அமைதியாக முடிந்துள்ளது. வாக்கு சதவீதமும் மோசம் என்றில்லாத அளவுக்கு ஜரூராக பதிவாகி, அதிலும் இடைத் தேர்தல் நடந்த தொகுதிகளில் 80 சதவீத அளவுக்கு பதிவாகி, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பத்திரமான இடத்தில் கொண்டு வைக்கப்பட்டு தூங்குகின்றன. மே 23-ம் தேதி தான் வாக்கு எண்ணிக்கை என்பதால் அடுத்த 34 நாட்களுக்கு எந்தக் கட்சிக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும்.. எந்தத் தொகுதியில் யார் ஜெயிப்பா? என்பது போன்ற கூட்டல், கழித்தல் விவாதங்கள்,பேச்சுக்கள், பந்தயம் வைப்பது போன்றவை தான் பிரதானமாக இருக்கப் போகிறது என்பது தான் உண்மை.
எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டுப் போகுது – திருமா, நவாஸ்கனி பகீர் குற்றச்சாட்டு