தேர்தல் பிரசாரத்தின் போது ஹர்திக் படேல் கன்னத்தில் பளார் !
தேர்தல் பிரசாரத்தில் ஹர்திக் படேல் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘பளார்’ என அவரது கன்னத்தில் ஒருவர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து படேல் சமூகத்துக்கு இடஓதுக்கீடு கேட்டு குஜராத்தில் பல போராட்டங்களை நடத்தியவர் ஹர்திக் படேல். இந்த போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர். ஹர்திக் படேலும் சிறைக்கு சென்று பின் வெளியே வந்தார். அதன்பின், காங்கிரஸில் இணைந்தார் ஹர்திக் படேல்.
இந்நிலையில், மக்களைவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் ஹர்திக் படேல். ஆகையால், குஜராத், சுரேந்திரநகர் மாவட்டத்தில் இன்று காலை ஹர்திக் படேல் பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது, ஹர்திக் படேல் மேடையில் வேட்பாளரை ஆதரித்து பேசிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு சால்வை அணிவிக்கும் வகையில் ஒருவர் மேடையில் ஏறி வந்தார். அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ‘பளார்’ என்று ஹர்திக் கன்னத்தில் அறைந்தார் அந்த நபர். அதன் பின், பாதுகாவலர்கள் ஹர்திக் படேலைபாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அந்த நபர் போலீஸில் ஒப்படைக்கப்பாடார்.
முன்னதாக, டெல்லியில் நேற்று பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்.பி.யும், தேசிய செய்தித் தொடர்பாளருமான ஜி.வி.எல். நரசிம்மராவ், செய்தியாளர் சந்திப்பு நடத்திக் கொண்டிருந்த போது அவர் மீது ‘ஷூ’ வீசப்பட்டது.
இந்நிலையில், தன் மீது நடந்த தாக்குதல் குறித்துப் பேசிய ஹர்திக் படேல், ‘பாஜக என்னைக் கொல்வதற்குத் திட்டமிட்டுள்ளது’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
சாத்வி போட்டியிட தடை கோரி வழக்கு! என்.ஐ.ஏ. நீதிமன்றம் விசாரணை