ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ.. இணையத்தில் வைரலாகி வரும் அடுத்த ஆபத்தான சவால்!
ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச் என அவ்வப்போது இணையத்தில் திடீர் திடீரென புது புது சவால்கள் தோன்றுகின்றன. அவை பெரும்பாலும் ஆபத்தில் தான் சென்று முடிகின்றன. அந்த வரிசையில் மற்றுமொரு புதிய சேலஞ்ச் தற்போது சமூக வலைதளத்தை ஆட்டிப் படைக்கிறது.
‘Shell on Challenge’ என அழைக்கப்படும் இந்த சவாலில், வாழைப்பழத்தை தோலுடன் சாப்பிடுவது, சிப்ஸ் பாக்கெட்டுகளை, கவர் பிரிக்காமல் அப்படியே சாப்பிடுவது போன்ற விபரீத செயல்களை இளைஞர்கள் செய்து அதனை வீடியோ எடுத்து இணையத்தில் போட்டு வருகின்றனர்.
பிளாஸ்டிக் மற்றும் அட்டைப் பொருட்களை திண்பதால், அதன்மூலம் ஏற்படும் விபரீதங்கள் குறித்து இளைஞர்கள் சிறிதும் சிந்திப்பதில்லை. இந்த வீடியோக்கள் வைரலாகி வருவதால், இதனை பார்த்து பலரும் இந்த சேலஞ்சை செய்ய முன் வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து இந்த சவாலுக்கு தடைவிதிக்க கோரிக்கையும் முன் வைத்துள்ளனர்.
முன்னதாக, பாடகர் டிரேக் பாடி செய்த கிகி சேலஞ்ச் உலகம் முழுவதும் படு வைரலாக பரவியது. ஓடும் காரில் இறங்கி நடனமாடி விட்டு, மீண்டும் காருக்குள் ஏறும் ஆபத்தான சவாலை பலரும் செய்தனர். சில இடங்களில் இந்த சவாலின் காரணமாக விபத்துகளும் ஏற்பட்டன.
இந்நிலையில், புதிதாக முளைத்திருக்கும் இந்த சவாலும் ஆபத்து நிறைந்தது என்றும், இது முற்றும் முன் தடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
மோடிக்கு ரஷ்யா வழங்கிய உயரிய விருது!