அமமுக-வின் தலைவர் சசிகலா..! அவரின் ஆலோசனையுடன் அனைத்தும் நடக்கிறது! -தங்க தமிழ்ச்செல்வன் பளிச்
சசிகலாவின் ஆலோசனைப் படியே அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
அ.தி.மு.க-வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை தொடங்கி, சுயேச்சையாக ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு, நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்களுக்கு, குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். அவர்கள், மறுக்கவே உச்ச நீதிமன்றத்தை நாடினார் டிடிவி தினகரன்.
அமமுக-வை கட்சியாகப் பதிவு செய்யவில்லை என்பதால், அமமுக-வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியது. இதனையடுத்து, அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அமமுக வேட்பாளர்கள் பரிசுப்பெட்டி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிந்த நிலையில் அமமுக-வை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியது. சென்னை அசோக் நகரில் உள்ள அமமுகவின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில், அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டார்.
டிடிவி தினகரனை சந்தித்த பின்பு, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளரும், தேனி தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன், ‘’சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் அமமுக-வின் தலைவராக இருப்பார்; அமமுகவின் துணைத்தலைவர் தேர்வு விரைவில் நடைபெறும். சசிகலா ஒப்புதலுடன் தான் அமமுக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டார். 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். சசிகலாவின் ஆலோசனையுடன்தான் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்’’ என்றார்.
டிடிவி தினகரன், கனிமொழி... எப்படி துப்பு கிடைக்கிறது? -ப.சிதம்பரம்