மாஸ் காட்டுவதெல்லாம் ஓகே..அந்த 4 விஷயங்களை தவிர்த்திருக்கலாமே லாரன்ஸ்? - காஞ்சனா 3 திரை விமர்சனம்
காஞ்சனா பாகம் 1, 2 டெம்ப்ளேட்டில் ஆவியின் பெயர்களையும் முன்கதையையும் மட்டும் மாற்றினால் காஞ்சனா 3 ரெடி. தன் உயிரைவிட அதிகமாக நேசித்த ஆசிரமக் குழந்தைகளையும், காதலியையும் கொன்ற அமைச்சரைப் பழிவாங்கத் துடிக்கும் காளி என்கிற பேயின் கதையே 'காஞ்சனா 3'.
சென்னையில் இருக்கும் ராகவா லாரன்ஸ் தன் தாத்தா பாட்டியின் 60-ம் கல்யாணத்துக்காக குடும்பத்தினருடன் கோவையில் இருக்கும் சொந்த ஊருக்கு செல்கிறார். போகும் வழியில் உணவு உண்பதற்காக ஒரு பசுமையான இடத்தை தேர்வு செய்கிறார்கள். அந்த இடத்தில் இருக்கும் மரத்தில் தீய சக்தி இருக்கிறது. லாரன்ஸ் செய்த சேட்டையில் பேய் அவர்களின் லன்ச் பேஸ்கெட்டுக்குள் நுழைந்து விடுகிறது. இதனை அறியாத லாரன்ஸ் குடும்பம் பாஸ்கெட்டுடன் தாத்தா வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு லாரன்ஸுக்காக மாமன் மகள்கள் மூன்று பேர் காத்திருக்கிறார்கள். ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி என மூன்று மாமன் மகள்களும் லாரன்ஸை சுற்றி சுற்றி வருகிறார்கள். அதன்பின்னர் பேய் வெளியே வருகிறது. ஒரு கட்டத்தில் லாரன்ஸுக்குள் இரு பேய்கள் இறங்கி விடுகிறது. இதனை மாமன் மகள்கள் தான் கண்டுப்பிடிக்கிறார்கள். லாரன்ஸ் மீது இறங்கியிருக்கும் அந்த ரோஸி, காளி என்ற பேய்கள் யார்? எதற்காக லாரன்ஸ் உடலில் புகுந்தார்கள். லாரன்ஸின் உடலுக்கு புகுந்து யாரைப் பழிவாங்குகிறார்கள் என்பது தான் திரைக்கதை.
லாரன்ஸ் நடிப்பு வழக்கம் போல் செம. படம் முழுவதும் பயங்கரமாக ஸ்கோர் செய்கிறார். அவருக்கு அடுத்தபடியாக தேவதர்ஷினி - ஸ்ரீமனின் மகளாக வரும் சிறுமியின் நடிப்பு பிரமாதம். கோவை சரளாவும் தேவதர்ஷினியும் நிறையா இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்கிறார்கள். முதல் பாகத்தில் இவர்கள் செய்த காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த ரசிகர்கள் கூட்டம் இம்முறை அமைதியாக திரையை வெறித்து பார்த்து கொண்டிருக்கின்றனர்.
ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி ஆகியோருக்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு கதாபாத்திரம் இல்லை. தாராளமாக கவர்ச்சி காட்டுகிறார்கள். பேயை பார்த்து பயந்து பதறும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்கள். லாரன்ஸிடம் ரொமான்ஸ் செய்யும் இடங்களில் முகம் சுளிக்க வைக்கிறார்கள். டெல்லி கணேஷ், ஆத்மியா பாட்ரிக், தருண் அரோரா, கபிர் துஹான் சிங், அனுபமா குமார், ஆர்.என்.ஆர்.மனோகர், அஜய் கோஷ், ஸ்டண்ட் மாஸ்டர் தீனா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து கொடுத்திருக்கிறார்கள். சூரி எதற்கு வந்தார் எங்கு போனார் என்பது கேள்விக்குறி. இப்படியொரு மொக்கையான கதாபாத்திரத்துக்கு ஏன் ஒப்புகொண்டார் என்றே தெரியவில்லை. இனி கதைக்குள் இருக்கும் லாஜிக் ஓட்டைகளை பார்ப்போம்..படத்தின் துவக்கத்தில் ஒரு பயங்கர சண்டை காட்சி. அதன் பிறகு ஒரு பேய் சீக்வன்ஸ். அதன் பிறகு தான் உண்மையான கதைக்குள் போகிறார் இயக்குநர் லாரன்ஸ். காமெடி என்னும் பெயரில் கோவை சரளா, தேவதர்ஷினி செய்வது சிரிக்கவைக்கவில்லை. சண்டை காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கவில்லை. கதை துண்டுத்துண்டாக வெட்டப்பட்டிருக்கிறது. படத்தின் துவக்கத்தில் மாஸ் காட்டி ரசிகர்கள் மனதில் ஒரு எதிர்பார்ப்பை தூண்டுகிறார்கள். ஆனால் அந்த எதிர்ப்பார்ப்பை படம் முழுவதும் பூர்த்தி செய்யவில்லை. திகில் காட்சிகளில் ஹாலிவுட் வாசம் வீசுகிறது. முந்தைய பாகங்களின் அதே காட்சிகளை மீண்டும் கண்முன் நிறுத்திய ஃபீல் வருகிறது. படத்தின் துவக்கத்தில் பணக்கார பெண்ணின் உடலில் ஏன் காளியும், ரோஸியும் புகுந்தார்கள் என்றே தெரியவில்லை. பிளாஷ்பேக் தான் மிகப்பெரிய பிளஸ். அதை இன்னும் கொஞ்சம் நீளமாக எடுத்துவிட்டு தேவையில்லாத காட்சிகளை தவிர்த்திருக்கலாம். லாரன்ஸ் கெட் அப் மாஸாக இருக்கிறது. ஆசிரம காட்சிகளில் நெகிழ வைக்கிறார். வில்லன்கள் ஓரிரு காட்சிகளில் மட்டும்தான் வருகிறார்கள். அவர்களின் நடிப்பு ஓகே ரகம்.
காஞ்சனா 3 எல்லை மீறிய இடங்கள்..*காஞ்சனா சீரிஸ் என்றாலே குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடன் பார்க்கும் படம் என்று நினைத்துதான் முதல் நாள் காட்சிக்கே அனைவரும் குழந்தைகளை கூட்டி வந்திருந்தார்கள். ஆனால், மூன்று நாயகிகளை வைத்து முகம் சுளிக்கும் அளவுக்கு கிளாமர் காட்சிகள் வைத்து சொதப்பி இருக்கிறார் இயக்குநர் லாரன்ஸ். *பிளாஷ்பேக்கில் ஒரு காட்சியில் தான் படிக்க வைத்த மாற்று திறனாளியை வில்லன் கொன்றுவிடுவார். அதை கண்டு ஆவேசமடையும் லாரன்ஸ் வார்த்தைக்கு வார்த்தை மாற்று திறனாளி தம்பிய கொன்னுட்டுயே.. மாற்று திறனாளி பையன கொன்னுட்டுயே என்றே சொல்லி கொண்டிருப்பார். மாற்று திறனாளி தம்பிக்கு ஒரு பெயர் இருக்கும் அல்லவா.. அதனை சொல்லாமல் மீண்டும் மீண்டும் மாற்று திறனாளி என்று சொல்வது உருத்தலாக இருக்கிறது.*படத்தின் துவக்கத்தில் வரும் திகில் காட்சிகளில்,பேய் ஓட்ட வரும் ரஷ்ய இளைஞர்கள் சிலுவையை வைத்து, புனித நீரை கொண்டு பைபிள் படித்து பேய் ஓட்டுவார்கள். அந்த காட்சிகள் மாஸாக இருக்கும். ஆனால் கிளைமாக்ஸ் காட்சிகளில் அவர்களை சம்பந்தமேயில்லாமல் வில்லனாக்கியிருக்கிறார்கள். சிலுவையை வைத்து பேய் ஓட்டும் ரஷ்ய இளைஞர்களை வில்லனாக்கி அகோரிகளை வைத்து அவர்கள் கதையை முடிப்பது அபத்தம். இது கண்டிப்பாக குறிப்பிட்ட மதத்தினரின் மனதை புண்படுத்தும். *பெண்களை மையமாக கொண்ட படங்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டன. திரைப்படங்களில் பெண்களுக்கு மரியாதைக்குரிய கதாப்பாத்திரங்கள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படியிருக்க கதையில் கிளாமருக்கு மட்டுமே மூன்று ஹீரோயின்களை பயன்படுத்தியிருப்பது ஏன்? தன் குடும்பத்து பெண்களையே வார்த்தைக்கு வார்த்தை ஃபிகர் ஃபிகர் என்று சொல்வதை தவிர்த்திருக்கலாம்.
காஞ்சனாவின் முந்தைய பாகங்கள் ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக இருந்தது. அதே எதிர்பார்ப்போடு வந்த ரசிகர்களை லாரன்ஸ் ஏமாற்றிவிட்டார். இது பக்கா கமர்ஷியல் படம்தான். என்றாலும் லாஜிக் வேண்டாமா? அடுத்த காஞ்சனாவில் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்பையும் லாரன்ஸ் பூர்த்தி செய்வார் என்று நம்புகிறோம்.
என்னை ஹீரோவாக்கி அரசியலில் இழுத்து விடாதீர்கள்- சீமானுக்கு நடிகர் லாரன்ஸ் எச்சரிக்கை