பாரபட்சம் காண்பிக்கிறதா பிசிசிஐ? - பிரக்யான் ஓஜா டுவீட்டால் புது சர்ச்சை
உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடி வந்த அம்பதி ராயுடுக்கு இடம் கிடைக்கவில்லை. அவரின் ஒருநாள் போட்டி சராசரி 40க்கும் அதிகமாக இருந்ததும் இடம்கிடைக்கவில்லை. அவருக்குப் பதிலாக தமிழக இளம் வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். இது விமர்சனத்துக்குள்ளானது. இதற்கு விளக்கம் அளித்த தேர்வு குழுவின் விளக்கத்தை கிண்டல் செய்யும் விதமாக அம்பதி ராயுடு டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டார். அதில், ``உலகக் கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காகப் புதிதாக 3டி கிளாஸ் ஒரு செட் ஆர்டர் செய்துள்ளேன்" எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். தேர்வுக்குழு தலைவர் பிரசாத், ``விஜய் சங்கர் மூன்று டைமன்சன்களிலும் (3டி) விளையாடுகிறார்" எனக் குறிப்பிட்டதைக் கிண்டலடிக்கும் விதமாக ராயுடு இவ்வாறு பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ராயுடுவின் பதிவுக்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா ஆதரவு தெரிவித்துள்ளார். அதில், ``ஹைதராபாத் கிரிக்கெட்டர்களின் நிலை எப்போதும் இதுதான். இதே நிலையில் நானும் இருந்துள்ளேன். உங்களின் வேதனை எனக்குப் புரியும்" என ஹைதராபாத் கிரிக்கெட்டர்கள்மீது பிசிசிஐ பாரபட்சம் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இதற்கும் எதிர்ப்புகளும் எழுந்தன. அவரை சிலர் வசைபாடத் தொடங்கினர். ``ஓஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுக்கு, அவர் பௌலிங் ஆக்ஷன் சர்ச்சைக்குள்ளான பிறகுதான் அவர் அணியில் எடுக்கப்படவில்லை. இதில் எங்கிருந்து பாரபட்சம் காண்பிக்கப்படுகிறது" என ஒருவர் கேள்வி எழுப்ப, இதற்குப் பதிலளித்த ஓஜா, ``நீங்கள் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கிறீர்களா? பௌலிங் ஆக்ஷன் சர்ச்சை சம்பவத்துக்குப் பின், எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்" எனக் கடுமையாகக் கூறியிருக்கிறார்.
பிராக்யன் ஓஜா 2009 முதல் 2013 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 24 போட்டிகளில் ஆடி 113 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2008-12 காலக்கட்டத்தில் 18 ஒருநாள் போட்டிகளில் 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.