ஓட்டுப்போடாத 1.64 கோடி பேர்.. அலட்சியமா? அவநம்பிக்கையா?
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையம் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. மதுரையில் மட்டும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில் மொத்தம் 71.90% வாக்குகள் பதிவானது. 38 மக்களவைத் தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 84 லட்சத்து 42 ஆயிரத்து 767பேர். இதில், 1 கோடியே 64 லட்சத்து 17 ஆயிரத்து 983பேர் இந்த தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றவில்லை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ கூறினார்.
மேலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், 11 லட்சத்து 56 ஆயிரத்து 730 பேர் தங்களது வாக்கினை செலுத்தவில்லை.
வட சென்னை, மத்திய சென்னை போன்ற பகுதிகளில் தான் அதிகளவு மக்கள் வாக்கு செலுத்த வரவில்லை என தெரியவந்துள்ளது.
வடசென்னையில் 63.48 சதவிகித வாக்குகளும், மத்திய சென்னையில் 58.69 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. 40 சதவிகிதத்திற்கும் மேலான மக்கள் இந்த பகுதியில் வாக்கு செலுத்தவில்லை.
இத்தனைக்கும் கிராமங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு சென்னையில் அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சாவடிகளும், அந்த அந்த பகுதி மக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலே அந்த வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த சூழலிலும் ஐந்தாண்டுக்கு ஒருமுறை மக்களால் செய்யமுடிகிற தங்களது ஜனநாயக கடமையையும் ஏன் சென்னை வாசிகள் செய்ய மறுக்கின்றனர் என்பது தெரியவில்லை.
இதற்கு மக்களின் அலட்சியம் காரணமா? அல்லது யாருக்கு ஓட்டுப் போட்டாலும், சென்னை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பிரச்னைகள் தீராத அவநம்பிக்கையா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
38 மக்களவைத் தேர்தல் - இறுதி வாக்கு சதவீதம் .! தர்மபுரி டாப் - தென் சென்னை ரொம்ப குறைவு