கலக்கும் ஹர்திக் படேல்! அலறும் குஜராத் பா.ஜ.க!
குஜராத்தில் காங்கிரஸின் பிரச்சாரப் பீரங்கியாக ஹர்திக் படேல் கலக்கி வருகிறார். இதனால், காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி விடுமோ என்ற அஞ்சும் பா.ஜ.க.வினர், அவருக்கு அடுத்தடுத்து தொல்லை கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
குஜராத்தில் படேல் இனத்தவர் அதிகமாக வசிக்கிறார்கள். வைர வியாபாரம், ஜவுளி வியாபாரம் என்று வர்த்தகத்தில் கோலோச்சும் படேல் இனத்தவர்கள், அரசு பணிகளில் அதிகளவில் இல்லை. இதனால், படேல் இனத்தவருக்கு இடஒதுக்கீடு கோரி, கடந்த 2015ம் ஆண்டில் பெரிய போராட்டம் நடந்தது. அப்போது ஹர்திக் படேல் என்ற இளைஞர், அந்தப் போராட்டத்திற்கு தலைமை வகித்து மாநில பா.ஜ.க. அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். அவர் மீது தேசத்துரோக வழக்கு உள்பட பல வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சமீபத்தில் ஹர்திக் படேல், காங்கிரசில் சேர்ந்து விட்டார். அவர் மீதான வழக்கில் தண்டனை பெற்றுள்ளதால், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து, காங்கிரஸின் பிரச்சாரப் பீரங்கியாக மாறி மாநிலம் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறார். அவரது பிரச்சாரத்தால் வழக்கமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கும் படேல் இனத்தவர், காங்கிரஸ் பக்கம் போய் விடுவார்களோ என்று மாநில பா.ஜ.க.வினர் பயப்படுகின்றனர். இதனால், அவருக்கு தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சுரேந்தர்நகரில் ஹர்திக் படேல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒருவர் திடீரென மேடையில் ஏறி, ஹர்திக் படேல் எதிர்பாராத நேரத்தில் அவரது கன்னத்தில் பளார் என அறைந்தார். அதற்குள் காங்கிரஸ் தொண்டர்கள் மேடையேறி அந்த நபரை சூழ்ந்து கொண்டு தாக்கினர். பலத்த காயமடைந்த அந்த நபரை போலீசார் மீட்டுச் சென்றனர். அவர் பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவராம். ஆனால், அவர் நிருபர்களிடம், ‘‘2015ம் ஆண்டு போராட்டத்தின் போது எனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தேன். அதற்காகத்தான் இப்போது ஹர்திக்கை அடித்தேன்’’ என்று எழுதி கொடுத்த வசனத்தை சொல்வது போல் பேட்டி அளித்தார்.
இதே போல், இன்னொரு சம்பவமும் நடந்தது. பஞ்ச்மால் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெச்சத்பாய் கந்த் என்பவருக்கு பிரச்சாரம் செய்ய ஹர்திக்கை அழைத்திருந்தனர். அகமதாபாத்தில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ள அந்த பகுதிக்கு ஹெலிகாப்டரில் செல்ல ஹர்திக் முடிவெடுத்தார். அவருக்காக லுனவாடா என்னும் ஊரில் விவசாய நிலத்தில் ஹெலிப்பேடு அமைத்தனர். அதற்காக அந்த நில உரிமையாளரான வினய் படேல் என்ற விவசாயிக்கு பணம் கொடுத்து அனுமதி பெற்றிருந்தனர். அதைக் கொண்டு மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி பெற்றிருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் அம்மாவட்ட கூடுதல் கலெக்டர் ஆர்.ஆர்.தாக்கர் என்பவர் காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து, ‘‘ஹெலிகாப்டர் இறங்க நிலம் தர முடியாது என்று வினய் படேல் கூறி விட்டார். எனவே, ஹெலிகாப்டர் வருவதற்கு அனுமதிக்க முடியாது’’ என்று கூறினார்.
இதையடுத்து, காங்கிரஸ் நிர்வாகிகள், வினய் படேலிடம் கேட்டதற்கு, ‘‘இடஒதுக்கீடு போராட்டத்தில் 14 பேர் உயிரிழந்தார்கள். அவர்களின் சாவை வைத்து ஹர்திக் அரசியல் செய்கிறார். அதனால்தான், அவர் வருவதை நான் விரும்பவில்லை’’ என்று அவரும் வசனம் பேசினார். இதைத் தொடர்ந்து, அகமதாபாத்தில் இருந்து ஹர்திக் படேல் காரிலேயே லுனவாடாவுக்கு வந்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
இதே போல், ஒவ்வொரு இடத்திலும் ஹர்திக் படேலுக்கு பா.ஜ.க. பெரும் தொல்லை கொடுத்து வருகிறது. நம்ம ஊரைப் போல் அங்கும் பதவி, பணத்துக்காக தலையாட்டும் அதிகாரிகளும் இருப்பதால், அவர்களும் முடிந்த அளவுக்கு ஹர்திக் பிரச்சாரத்தை தடை செய்கிறார்களாம். ஆனால், காங்கிரஸார் அதைப் பொருட்படுத்தாமல் பிரச்சாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
காங்கிரஸில் இணைந்தார் ஹர்திக் படேல் மக்களவை தேர்தலில் களமிறங்க வாய்ப்பு