திருப்பதி தங்கம் பறிமுதல்! பஞ்சாப் வங்கி மீது பா.ஜ.க. பாய்ச்சல்!

‘‘திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான 400 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்ததன் மூலம் தேவஸ்தானத்தின் பெயரே கெட்டு போய் விட்டது. இதற்கு காரணமான பஞ்சாப் நேஷனல் வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பா.ஜ.க. கூறியுள்ளது.

கடந்த 17ம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை சோதனை செய்த போது, 1381 கிலோ தங்கக் கட்டிகளுடன் 2 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், அவை சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, திருப்பதி தேவஸ்தானத்திற்கு எடுத்து செல்லப்படுவதாக தெரிய வந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான தங்கத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியில் டெபாசிட் செய்திருக்கின்றனர். டெபாசிட் காலம் முடிந்து விட்டதால், 400 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த தங்கக் கட்டிகளை தேவஸ்தான கருவூலத்திற்கு கொண்டு செல்லும் போதுதான் பறக்கும் படையிடம் மாட்டிக் கொண்டது. பஞ்சாப் நேஷனல் வங்கி இது குறித்து தேவஸ்தானத்திற்கு முன்கூட்டியே தகவல் கொடுக்கவில்லையாம். அதற்கான ஆவணங்களையும் கொண்டு செல்லவில்லையாம்.

இந்நிலையில், ஆந்திர பா.ஜ.க. தலைவரும், திருப்பதி தேவஸ்தான முன்னாள் டிரஸ்டியுமான பானு பிரசாத் கூறுகையில், ‘‘பஞ்சாப் நேஷனல் வங்கி முறையாக செயல்படாததால், தேவஸ்தானத்தின் பெயரே கெட்டு விட்டது. எனவே, மத்திய நிதியமைச்சகம் இது குறித்து விசாரித்து அந்த வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊரு பெயரை மாத்துங்க... மேனகா மீண்டும் சர்ச்சை!
More News >>