களத்தில் மட்டுமல்ல, காதலிலும் சதம்தான்: உருகும் காதல் மனைவி அனுஷ்கா
இந்தியா மட்டுமல்ல உலகத்தையே தங்கள் காதல் திருமணத்தால் திரும்பி பார்க்க வைத்த ஜோடி, விருஷ்கா தம்பதியினர்.
காதலியாக இருந்தபோதும் சரி, தற்போது மனைவி ஆன பின்னரும் சரி, விராட் கோலியின் சதங்களுக்கும் சாதனைகளுக்கும் பின்னால் உற்ற துணையாகவும் முன்னாள் கைத்தட்டி ஆர்ப்பரிக்கும் ஊக்கத்துணையாகவும் இருப்பவர் அனுஷ்கா ஷர்மா.
‘இதுவல்லவோ காதல்’ என ஊரே வியக்கும் வகையில் தாங்கள் சார்ந்த துறையிலும் சரி, தங்களது சொந்த வாழ்க்கையிலும் சரி, யாரும் யாரையும் விட்டுக்கொடுக்காது சாதனை மேல் சாதனை படைத்து ஜொலித்து வருகின்றனர் இந்தத் தம்பதியினர். இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் புது மாப்பிள்ளை விராட் சதம் விளாசி தன் அணிக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளார்.
இந்தப் போட்டியின் நடுவே களத்தில் விராட் கலக்கிக்கொண்டிருக்கும் போதே அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலியின் புகைப்படத்தை காதல் தலைப்புகளுடன் இடைவிடாது வெளியிட்டுக்கொண்டே இருந்தார்.
தன் கணவரின் ஒவ்வொரு நகர்வையும் கொண்டாடும் மனைவி அனுஷ்காவுக்கு லைக்குகள் அள்ளுகிறது. ஆனால், இந்த ஆரவாரங்களிலேயே திளைத்துக்கிடக்காமல் அவரவர் துறையில் சாதித்துக்கொண்டும் ஒருவரையொருவர் பாராட்டியும் அவரவர் ரசிகர்களுக்கு முன்னுதாரணமாகவேத் திகழ்கின்றனர் இத்தம்பதியினர்.