`இங்க இருக்குறது சேஃப்டி இல்லை - விங் கமாண்டர் அபிநந்தனை இடமாற்றம் செய்த விமானப்படை
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீதான தாக்குதலுக்கு பிறகு இந்திய - பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்திய போர் விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் முகாமை தாக்கி அழித்தன. அப்போது, பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் சென்ற இந்திய விமானம், அந்நாட்டு எல்லையில் விழுந்தது. பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தால் அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் பிடியில் அபிநந்தன் இருந்தபோது வெளியான வீடியோ ஒன்றில், அபிநந்தன் டீ குடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. பின்னர், இந்தியா வசம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவத்தால், அபிநந்தன் இந்தியாவை தாண்டி பல நாடுகளாலும் அறியப்பட்டார். நாடு திரும்பிய அவருக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் விங் கமாண்டர் அபிநந்தனை விமானப்படை அதிகாரிகள் தற்போது இடமாற்றம் செய்துள்ளனர். ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் இருந்து மேற்குப்பகுதி விமானப்படை தளத்துக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக் கருதி, பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் போர் காலத்தில் சிறப்பான பணிக்காக வழங்கப்படும் வீர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் பரிந்துரை செய்துள்ளது இந்திய விமானப்படை.