ஐஸ் பக்கெட் சேலஞ்ச் தெரியும் அதென்ன நாப்கின் சேலஞ்ச்..?
‘பெண்களுக்கு மாதவிடாய் என்பது கொடுமையானது இல்லை. அந்நாட்கள் மறைக்கப்பட வேண்டியவையும் இல்லை’ என்பதை வலியுறுத்தும் விதமாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ‘பேட்மேன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
விரைவில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தில் மாதவிடாய், நாப்கின் பயன்பாடு ஆகியவை குறித்த பிற்போக்குத்தனமான புரிதல்களைக் களையும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளனர்.
இத்திரைப்படம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் அக்ஷய்குமார் யூ-டியூப் பிரபலமான ஆரண்யா ஜோஹருடன் இணைந்து ஒரு மாதவிடாய் பாடலைப் பாடி யூ-டியூப் மூலம் வெளியிட்டுள்ளார். இதற்கு பாலிவுட்டின் பல முக்கியப் பிரமுகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் அக்ஷய் குமார் தனது நண்பர்களுக்கு ஒரு புதிய சவாலையும் விடுத்துள்ளார்.
அதாவது, மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் உடன் அக்ஷய்குமார் தனது புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு இதே சவாலை செய்துகாட்ட முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அக்ஷய் குமார் வெளியிட்ட சவாலை உடனே ஏற்றுக்கொண்டு முதலாவதாக அதை நிறைவேற்றியவர் அவரது மனைவி டிம்பிள். அதைத்தொடர்ந்து ‘பேட்மேன்’ படத்தின் நாயகியான சோனம் கபூரும் புகைப்படம் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து ஆலியா பட் உள்ளிட்ட பிரபல பாலிவுட் பிரபலங்களும் இந்த சவாலை நிறைவேற்றி வருகின்றனர். இந்த சவால் இன்றைய ட்விட்டர் ட்ரெண்டாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.