வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறிவாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த பெண் தாசில்தார்...! மதுரையில் நள்ளிரவு பரபரப்பு
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்கள் பலவற்றை நகல் எடுத்த பெண் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பை மீறி அதிகாரி நுழைந்தது எப்படி? மின்னணு வாக்கு எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய நடந்த சதியா? என்று கூறி மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் நள்ளிரவில் நடத்திய போராட்டத்தால் மதுரையில் பல மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மக்களவைத் தொகுதியில் கடந்த 18-ந் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 23-ந் தேதி தான் நடைபெற உள்ளது என்பதால் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பை மீறி நேற்று மாலை பெண் அதிகாரி ஒருவர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்து பல்வேறு ஆவணங்களை நகல் எடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது. இந்த தகவல் வெளியில் கசிய, நேற்று நள்ளிரவில் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை மற்றும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் வாக்கு எண்ணிக்கை மையம் முன் திரண்டு திடீர் போராட்ட்தில் ஈடுபட்டனர். பெண் அதிகாரி அத்துமீறி நுழைந்தது ஏன்? எந்திரங்களில் தில்லு முல்லு நடந்ததா? என்பது தெரிய வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் என்ன நடந்தது என்பதை சிசிடிவி காட்சிகள் மூலம் உடனடியாக ஆராய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நேரம் அப்பகுதியில் சந்தேகப்படும்படி படம் பிடித்த 5 பேரை சரமாரியாக அடித்து உதைத்ததால் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் உடனே வந்து வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட்டு, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் போராட்டம் நீடித்தது.
தாமதமாக அங்கு வந்த ஆட்சியர் நடராஜன் போராட்டம் நடத்திய வர்களை சமாதானம் செய்து, சிசிடிவி காட்சிகளை ஆராய சம்மதித்தார். இதில், அந்தப் பெண் அதிகாரி மதுரை கலால் துறை தாசில்தார் சம்பூர்ணம் என்பதும், மையத்தில் மதுரை மேற்கு சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகள் தொடர்பான ஆவணங்களை மற்ற 3 பேருடன் சேர்ந்து பல மணி நேரம் நகல் எடுத்ததும் தெரிய வந்தது. மேலும் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந் 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அறைப் பகுதியின் சீல் பத்திரமாக இருந்ததும் தெரிய வந்தது.
பின்னர் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆட்சியர் நடராஜன் சம்பந்தப்பட்ட பெண் தாசில்தார் உரிய அனுமதியின்றி மையத்திற்குள் அத்துமீறியது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீல் வைத்து பாதுகாப்பை பலப்படுத்துதாகவும் உறுதி அளித்தார். இதன் பின்னரே அனைவரும் சமாதானமாகினர்.
இந்நிலையில் இரவோடு இரவாக சம்பந்தப்பட்ட பெண் தாசில்தார் சம்பூர்ணத்திடம் விசாரணை நடத்திய ஆட்சியர், அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார். மேலும் பெண் தாசில்தார் சம்பூர்ணம் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளதாகவும் ஆட்சியர் நடராஜன் இன்று காலை தெரிவித்துள்ளார்.
வாக்கு மையத்திற்குள் பெண் தாசில்தார் அத்துமீறி நுழைந்தது ஏன்? குறிப்பாக மேற்கு தொகுதி வாக்குப்பதிவு விபரங்களை நகல் எடுத்தது எதற்காக? அந்த விபரங்களை சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லு முல்லு நடத்த ஆளும் தரப்பு சதித் திட்டம் தீட்டியுள்ளதா? என்பது பல்வேறு சந்தேகங்களை எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ளனர்.மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாதத்திற்கும் மேல் நாட்கள் உள்ள நிலையில் இன்னும் என்னென்ன குளறுபடிகள் நடக்கப் போகிறதோ? என்ற திகிலில் மதுரை தொகுதி எதிர்க்கட்சி வேட்பாளர்கள் உறைந்துள்ளனர்.
பா.ஜ.விடமிருந்து நாட்டை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வோம்- அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்