இலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தில் பயங்கரம் : தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்பு - ஏராளமானோர் பலி
இலங்கை கொழும்பு மற்றும் புறநகர் ப பகுதியில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். ஈஸ்டர் பண்டிகைக்கான பிரார்த்தனைகளில் கிறிஸ்தவ மதத்தினர் ஈடுபட்டிருந்த போது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தால் இலங்கை முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈஸ்டர் பண்டிகையான இன்று காலை கொழும்பு புறநகர்ப் பகுதியான கொச்சுக்கடை, நீர்க் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய தேவாலயங்களில் ஏராளமானோர் சிறப்பு பிரார்த்தனைகளில் பங்கேற்றிருந்தனர். அப்போது அடுத்தடுத்து பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இதே போன்று 3 நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்தன.
மொத்தம் 7 இடங்களில் நடத்தப்பட்ட இந்த தொடர் குண்டு வெடிப்பில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 500 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பில் சிக்கிய பலர் கை, கால்கள் இழந்து, சின்னாபின்னமான சம்பவம் இலங்கையில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலியானவர்களில் பலர் இந்திய வம்சாவளியினர் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்திய வெளியுறவு அமைச்சகம், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை உஷார்படுத்தியுள்ளது. உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் பிரச்னையால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த அசாதாரண சூழல் முடிவுக்கு வந்து, கடந்த சில ஆண்டுகளாக அமைதி நிலவியது. இந்நிலையில் சிறு பான்மையினராக கிறிஸ்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார்? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.
இலங்கையில் 3 குண்டுவெடிப்பு இந்திய அரசு கவலை