15 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு நோட்டிஸ், அபராதம்!

பண மதிப்பு நீக்கத்தின்போது, ரூ.15 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு, திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பொதுமக்கள் தங்களிடமுள்ள500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி-யில் டெபாசிட் செய்து, அதற்குரிய புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.

அதன்படி 15 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான பணத்தை பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்து, புதிய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக்கொண்டனர். இவ்வாறு டெபாசிட் செய்தவர்களில், ரூ. 15 லட்சத்திற்கும் அதிகமான தொகையை வங்கியில் செலுத்தியவர்கள், அதற்குரிய கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை அப்போது கூறியது.

இது குறித்து கூறியுள்ள நேரடி வரிகள் மத்திய வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா, “ரூ. 15 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமாக டெபாசிட் செய்தவர்களில், 1 லட்சத்து 98 பேர் வங்கி வாடிக்கையாளர்கள், தங்களின் கணக்குகளை தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் நோட்டீஸ் அனுப்பியும் ஒருவர் கூட பதிலளிக்கவில்லை.

வருமான வரித்துறையின் நோட்டீஸூக்கு உரிய பதிலை அளிக்காவிட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த மூன்று மாதங்களில், வரி ஏய்ப்பு, கணக்கு தாக்கல் செய்வதில் தாமதம் என பல்வேறு காரணங்களுக்காக 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் சுஷில் சந்திரா கூறியுள்ளார்.

More News >>