10 வாக்குச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை
தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்தது உறுதியாகியுள்ளதால் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த சத்ய பிரதா சாகு பரிந்துரை செய்துள்ளார். இதனால் ஓரிரு நாட்களில் மறு ஓட்டுப்பதிவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தவிர்த்து மீதம் உள்ள 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் கடந்த 18-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் ஓட்டுப் பதிவின் போது முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக வாக்குப்பதிவு மைய அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் பத்து வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பரிந்துரை செய்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் 8, பூந்தமல்லியில் 1, கடலூர் 1, என மொத்தம் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற பரிந்துரைத்துள்ளார்.
இதனால், தமிழக அதிகாரியின் பரிந்துரையை ஏற்று, இந்த 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுத்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
மோடியின் வாழ்க்கை வரலாற்று தொடருக்கும் தடை! –தேர்தல் ஆணையம் ‘அதிரடி’