இலங்கை குண்டுவெடிப்புக்கு பிரதமர் மோடி கண்டனம்!
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை இந்திய ஜனாபதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் 3 தேவலாயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் இன்று பயங்கர குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்புகளில் 160 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் இந்தியர்கள் உள்ளனரா என்பது இது வரை தெரியவில்லை.
குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்துள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘‘இலங்கையில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். நாகரீக உலகில் இது போன்ற முட்டாள்தனமான தாக்குதல்களை அனுமதிக்கவே முடியாது. இந்த தருணத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம்’’ என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘இலங்கையில் நிகழ்ந்துள்ள கொடூரமான குண்டுவெடிப்பு சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறேன். இலங்கை மக்களுக்கும், அரசுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை நமது பிராந்தியத்தில் அனுமதிக்கவே கூடாது. இலங்கைக்கு இந்தியா என்றும் ஆதரவாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.
ஊரு பெயரை மாத்துங்க... மேனகா மீண்டும் சர்ச்சை!