`ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் தான் செய்துள்ளார்கள் - இலங்கை குண்டுவெடிப்பில் 207 பேர் பலி 450 பேர் படுகாயம்
ஈஸ்டர் தினமான இன்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் அடுத்தடுத்து பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளன. கொழும்புவில் உள்ள செயின்ட் அந்தோணி சர்ச், மேற்கு கடலோரப் பகுதியான நெகம்போவில் உள்ள ஸ்டீபன் சர்ச், மட்டக்கிளப்பில் உள்ள சர்ச் என்று மூன்று சர்ச்சுகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதே போல், கொழும்புவில் கிங்ஸ்பரி, சங்ரிலா, சின்னாமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்தன. இதில் தற்போது 207 பேர் வரை பலியாகியுள்ளனர் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 450 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை 9 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.
இந்த கொடூர தாக்குதல் தொடர்பாக பேசியுள்ள அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ரூவன் விஜயவர்த்தனா, ``இந்த குண்டுவெடிப்பில் பெரும்பாலானவை தற்கொலைப்படை தாக்குதல்கள் தான். மொத்த குண்டுவெடிப்பையும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் தான் செய்துள்ளனர். இதுவரைக்கும் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முதல்கட்டமாக இந்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.