நீதிமன்றத்தின் பிடியில் ராஜபக்zwnjசே! - ஊழல்களை விசாரிக்க உத்தரவு
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது, அரசு கொள்முதல் நடவடிக்கைகளில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற மைத்ரிபால சிறிசேன, முந்தைய ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்களை விசாரித்து தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி, ராஜபக்சே-வுக்கு நெருக்கமானவரான லலித் வீரதுங்கா மீதான ஊழல் புகாரை விசாரித்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. மேலும், இதுதொடர்பான வழக்கில் ராஜபக்சே-விடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தனக்கு எதிராக நடத்தப்படும் அரசியல் பழிவாங்கும் செயல் என்று ராஜபக்சே கூறியிருந்தார். இந்நிலையில், சிறிசேன வாக்குறுதி அளித்து 3 ஆண்டுகளாகியும் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது.
இதனையடுத்து, ராஜபக்சே ஆட்சிக் காலங்களில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.