பேர்ஸ்டோவ் - வார்னர் காம்போவின் `நச் ஆட்டம் - 6வது தோல்வியை தழுவிய கொல்கத்தா
கொல்கத்தா அணியை எளிதில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் அணி எளிதில் வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் 38வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 159 ரன்களை எடுத்துள்ளது. கொல்கத்தா அணி தரப்பில் அதிக பட்சமாக கிறிஸ் லின் 51 ரன்னும், சுனில் நரைன் 25 ரன்னும், ரிங்கு சிங் 31 ரன்னும் எடுத்தனர். எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எளிதாக கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளித்தது. தொடக்க வீரரான வார்னர் சிறப்பாக விளையாடி நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தார்.
மேலும் மற்றொரு வீரர் பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்த நிலையில் ஐதராபாத் அணி ஐந்து ஓவர் முன்னதாகவே வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியில் அதிகபட்சமாக வார்னர் 67 ரன்களும், பேர்ஸ்டோவ் 80 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய கலீல் அகமது ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.