ராகுல் காந்தி ஓகே சொன்னால் மோடியை எதிர்த்துப் போட்டி - பிரியங்கா திட்டவட்டம்
காங்கிரஸ் கட்சித் தலைவரான தனது சகோதரர் கேட்டுக் கொண்டால் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடத் தயார் என்று தேர்தலில் போட்டியிடுவது குறித்து பிரியங்கா காந்தி முதன்முதலாக தமது கருத்தை தெரிவித்துள்ளார்.
தீவிர அரசியலில் குதித்துள்ள பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிக்கு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில், பிரியங்காவின் பிரச்சாரம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது. இதே வேகத்தில் மக்களவைத் தேர்தலிலும், குறிப்பாக மோடியை எதிர்த்து வாரணாசியில் பிரியங்கா போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் ஓங்கி குரல் ஒலிக்கிறது.
ஆனால் பிரியங்கா வோ, தான் போட்டி யிடுவது குறித்து எந்தக் கருத்தும் கூறாமல் தொடர்ந்து மவுனம் சாதித்து வந்ததால் தொடர்ந்து சஸ்பென்ஸாகவே இருந்து வந்தது. இந்நிலையில் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கடந்த 2 நாட்களாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருந்த பிரியங்கா, தான் போட்டியிடுவது குறித்து முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவரான ராகுல் காந்தி கேட்டுக் கொண்டால், தேர்தலில் போட்டியிடத் தயார் என்பது தான் பிரியங்கா கூறிய கருத்தாகும். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் கடைசி கட்டமாக மே 19-ந் தேதி தான் தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளதால் பிரியங்கா போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தான் போட்டியிடுவது குறித்தான கேள்விக்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் முதன் முறையாக பிரியங்கா கருத்து கூறியுள்ளதால், இதற்கான விடை ஓரிரு நாளில் தெரிந்துவிடும் என்பது நிச்சயமாகியுள்ளது.