இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் மேலும் 2 இந்தியர்கள் பலி
கொழும்புவில் 8 இடங்களில் நேற்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் மேலும் 2 இந்தியர்கள் பலியாகி உள்ளனர்.
ஈஸ்டர் தினமான நேற்று இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் உட்பட அடுத்தடுத்து 8 இடங்களில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 200க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்.
கொழும்புவில் உள்ள செயின்ட் அந்தோணி சர்ச், மேற்கு கடலோரப் பகுதியான நெகம்போவில் உள்ள ஸ்டீபன் சர்ச், மட்டக்கிளப்பில் உள்ள சர்ச் என்று மூன்று சர்ச்சுகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதே போல், கொழும்புவில் கிங்ஸ்பரி, சங்ரிலா, சின்னாமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்தன.
இந்த குண்டுவெடிப்புகளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கொழும்பு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா, இந்திய பிரதமர் மோடி உள்பட பல நாட்டு தலைவர்களும், ரஜினிகாந்த், விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில், இந்தியாவை சேர்ந்த லஷ்மி,நாராயண் சந்திரசேகர்,ரமேஷ்,ரஜினா ஆகியோர் உயிரிழந்த நிலையில் தற்போது ஹனுமந்தராயப்பா,ரங்கப்பா ஆகியோர் உயிரிழந்ததாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு இலங்கை அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலை சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இலங்கையில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இதுவரையில் எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கொழும்பு போலீசார் 13 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
`ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் தான் செய்துள்ளார்கள்' - இலங்கை குண்டுவெடிப்பில் 207 பேர் பலி; 450 பேர் படுகாயம்