காற்றுக்காக கதவை திறந்து வைத்த விவசாயி: 32 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்!

பவானியில் இரவு நேரத்தில் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிய விவசாயி வீட்டில் மர்ம நபர் 32 பவுன் நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பவானி அடுத்த சீதபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி தேவராஜ் (வயது 45). தற்போது கோடை காலம் என்பதால் இரவு நேரத்திலும் வீடுகளில் வெப்பம் அதிகமாக உள்ளது. அதனால் தேவராஜ் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் கதவு திறந்து வைத்து குடும்பத்துடன் தூங்கினார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர் தேவராஜின் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 32 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றார். காலையில் கண் விழித்த தேவராஜ், பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவை சோதனை செய்தபோது அதில் இருந்த 32 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தேவராஜ் பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் பவானியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரவு நேரங்களில் சன்னல், வீட்டு கதவுகளை திறந்து வைத்து தூங்காதீர்கள். அப்படி செய்தால் அது திருடர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து விடும் என்று காவல்துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தினாலும், அதனை பலர் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் வாகன சோதனையில் 1381 கிலோ தங்கம் சிக்கியது
More News >>