உலகக்கோப்பையை நான்காவது முறையாக வென்ற இந்திய இளைஞர் படை!

19 வயதிற்குட்டோருக்கான உலக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.

பரபரப்பான 19 வயதிற்குட்டோருக்கான உலக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியும், இந்திய அணி மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஜோனாதன் மெர்லோ 76 ரன்களும், பரம் உபல் 34 ரன்களும், ஜாக் எட்வர்ட்ஸ் 28 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில், இஷான் பொரேல், ஷிவ் சிங், கமலேஷ் நாகர்கோட்டி, அனுகுல் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் பிரித்திவ் ஷா 29 ரன்களிலும், ஷுப்மன் கில் 31 ரன்களிலும் வெளியேறினார். அதன் பின்னர் மஞ்சோட் கல்ராவும், ஹர்விக் தேஷாய் இருவரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

அபாரமாக ஆடிய மஞ்சோட் கல்ரா சதம் விளாசினார். இறுதியில் இந்திய அணி 38.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் 102 பந்துகளில் [8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 101 ரன்களும், ஹர்விக் தேஷாய் 61 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் குவித்து களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சதம் விளாசிய மஞ்சோட் கல்ராவும், தொடர்நாயகன் விருதை இந்திய வீரர் சப்மன் கில்லும் வென்றனர்.

இந்த தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம் ரூபாயும், இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர் குழுவினருக்கு தலா 20 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

More News >>