ஓட்டு போடலேன்னா 51 ரூபாய் அபராதம்!

‘யாரும் ஓட்டு கேட்டு பிரச்சாரத்திற்கு போகக் கூடாது. ஆனால், ஓட்டு போடாவர்களுக்கு 51 ரூபாய் அபராதம்’’ என்று பஞ்சாயத்து உத்தரவு போட்டிருக்கிறது குஜராத்தில் உள்ள விநோத கிராமம்!

குஜராத்தில் உள்ள ராஜசமத்தியா கிராமத்தில்தான் அந்த உத்தரவு. அதாவது, தேர்தல் பிரச்சாரத்திற்கு கிராமத்து இளைஞர்கள் சென்றால், ஆளுக்கொரு கட்சியில் சேருவார்கள். பிறகு தேவையில்லாத சண்டைச் சச்சரவு வரும். தேர்தல் நேரத்தில் ஏற்படும் விரோதம் கடைசியில் ஊரையே பிளவுபடுத்திக் கூட விடும். அதனால்தான், அந்த கிராமத்தில் இருந்து யாருமே பிரச்சாரத்திற்கு செல்லக் கூடாது என்றும், ஓட்டு கேட்டும் யாரும் வரக் கூடாது என்றும் பஞ்சாயத்து உத்தரவு போட்டிருக்கிறது.

இது பற்றி பஞ்சாயத்து தலைவர் அசோக்பாய் வகேரா கூறுகையில், ‘‘கிராமத்தில் எல்லோரும் ஒற்றுமையாக வசித்து வருகிறோம். இந்த ஒற்றுமையை தேர்தல் சண்டையால் குலைத்து விட அனுமதிக்க முடியாது. அதனால்தான், யாரையும் ஊருக்குள் பிரச்சாரம் செய்யவே அனுமதிப்பதில்லை. அதே சமயம், எல்லோரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகிறோம்.

வாக்களிக்கும் கடமையில் இருந்து யாரும் தவறி விடக் கூடாது என்பதற்காக தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு 51 ரூபாய் அபராதம் விதிக்கிறோம். இந்த தொகையை பஞ்சாயத்துக்கு கட்ட வேண்டும். ஆனால், எல்லோருமே வாக்களித்து விடுகிறார்கள். இருந்தும் கிராமத்தில் வாக்குசதவீதம் 95, 96 சதவீதம்தான் வரும். காரணம், இறந்து விட்ட வாக்காளர்கள் மற்றும் திருமணமாகி வெளியூர் சென்றவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்காமல் இருந்திருப்பார்கள்.

இவ்வாறு அசோக்பாய் கூறினார்.

இந்த கிராமத்தில் இலவசமாக வைபை வசதி செய்திருக்கிறார்கள். அதே போல், பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதி்த்திருக்கிறார்கள். ஊர் முழுக்க சி.சி.டி.வி. கேமராக்களும் பொருத்தி ஒரு முன்மாதிரியான கிராமமாக இருக்கிறது.

அரசு அலுவலகத்தில் மது குடித்து ஜாலியாக இருந்த அதிகாரிகள் சஸ்பெண்ட்
More News >>