கூட்டணிக்கு ஆம் ஆத்மி நோ - டெல்லியில் காங்கிரஸ் தனித்தே போட்டி
டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க கடைசி வரை முயன்ற காங்கிரசின் முயற்சிகள் பலிக்கவில்லை. இதனால் தனித்தே போட்டியிடுவதாகக் கூறி வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ்.
தலைநகர் டெல்லியில் கடந்த 2014 பொதுத் தேர்தலில் மொத்த முள்ள 7 தொகுதிகளையும் மொத்தமாக அறுவடை செய்தது பாஜக . ஆனால் அதன் பின் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்று முதல்வராக உள்ளார்.
இதனால் பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மியுடன் கூட்டணி சேர்வதே சிறந்தது என காங்கிரஸ் திட்டமிட்டது. ஆனால் பஞ்சாப், அரியானா என ஆம் ஆத்மி பலமாக உள்ள மாநிலங்களிலும் கூட்டணியில் இடம் தந்தால் மட்டுமே டெல்லியில் பங்கு என்று கெஜ்ரிவால் பிடிவாதம் காட்டினார். ஆனால் காங்கிரசோ டெல்லியை மட்டுமே குறி வைத்து பேரம் பேசியது. ஆம் ஆத்மி க்கு 4 சீட், காங்கிரசுக்கு 3 தொகுதி என்ற ரீதியில் கடைசி வரை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் பலனளிக்கவில்லை.
இதனால் டெல்லியில் தனித்தே போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்து விட்ட காங்கிரஸ், மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் வடகிழக்கு டெல்லியிலும், டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் புது டெல்லி தொகுதியிலும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜே.பி.அகர்வால் சாந்தினி சவுக்கிலும் போட்டியிடுகின்றனர். கிழக்கு டெல்லியில் அரவிந்தர் சிங் லவ்லியும், மேற்கு டெல்லியில் மகாபால் மிஸ்ரா, வடமேற்கு டெல்லியில் ராஜேஷ் லிலோதா ஆகியோரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் காங்கிரசுக்கு செல்வாக்கு ஓரளவுக்குத்தான் என்பதால் அங்கு பாஜக - ஆம் ஆத்மி இடையே கடும் பலப்பரீட்சை நிலவும் என்று தெரிகிறது.
மோடியை எதிர்ப்பது யார்? மிரட்டும் எதிர்க்கட்சிகள்!!