தலைமைச் செயலகத்தை சுத்தம் செய்பவர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழக தலைமைச் செயலகத்தை சுத்தம் செய்பவர்களுக்கு மாதச் சம்பளமா வெறும் 5ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுவதாக சிஐடியூ மாநிலத் துணைத் தலைவர் கே.விஜயன் குற்றம் சாட்டியுள்ளர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “தமிழகத்தின் தலையெழுத்து நிர்ணயிக்கும் இடம் தலைமைச்செயலகம். இங்கு தான் சட்டமன்றம் இருக்கிறது.இந்த வளாகத்தில் உள்ள பத்து மாடிக்கட்டிடம் மற்றும் பழைய தலைமைச்செயலக கட்டிடம் சுத்தமாக இருக்கிறதென்றால், அதற்கு காரணம் அங்கு செல்பவர்களின் கண்ணில் படுகின்ற பச்சை நிற சீருடையில் திரியும் தூய்மைப் பணியாளர்கள் தான்.

அந்தப் பணியாளர்கள் காலை 7 மணிக்கு வந்தால் மாலை 4 மணிக்கு வீட்டிற்குச்செல்வார்கள். நான் அந்த தலைமைச் செயலகத்திற்கு சென்றபொழுது எதார்த்தமாக அந்தப் பணியாளரிடம் ஊதியம் எவ்வளவு என்று கேட்டேன். அவர்கள் சொன்னது அதிர்ச்சி அளித்தது.

மாதம் ரூ.5500 தான் ஒப்பந்தக்காரர் அளிக்கின்றாராம். அதில் ரூ.500 பி.எப்.க்கு எடுத்து விடுவார்களாம். ஆக ரூ.5000 தான் மாதச் சம்பளம்.இதில் பேருந்தில் செல்வதற்கு பஸ் பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது போல் இவர்களுக்கு இல்லை. தினம் பேருந்து கட்டணம் ரூ.50 செலவாகிறதாம். மாதம் ரூ.1300 செலவாகிவிடுமாம்.

இப்படி 120 தொழிலாளர்கள் வேலைசெய்கின்றனர். இந்த தலைமைச் செயலகத்தில் தான் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புச் செயலாளர் உள்ளார். அவரால்தான் குறைந்தபட்சக் கூலி நிர்ணயம் செய்தது உத்தரவு போடப்படுகின்றது.

இவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் கூட வழங்கப்படவில்லை. ஒப்பந்தக்காரர் தான் இதற்கு பொறுப்பு என்று சாதாரணமாக கூறிவிடுவார்கள். ஆனால் ஒப்பந்தக்காரருக்கு அளிக்கும் தொகை மிகக்குறைவானது. தொழிலாளர்களுக்கு போய்ச்சேரும் பொழுது எவ்வளவு செல்கிறது என்று யாரும் பார்ப்பதில்லை. இதே நிலைதான்.

ஆளும் கட்சியானது தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உயர்த்திய சம்பளத்தில் 10 சதவீதம் கொடுத்திருந்தால் கூட அந்த தூய்மைப் பணியாளர்கள் மகிழ்ந்து போய் இருப்பார்கள். ஏழைகளின் அரசு அல்லவா. இவர்களைப்பற்றி சிந்திக்க ஏது நேரம்? அரசே குறைந்தபட்ச கூலியை கொடுக்காததற்கு வெட்கப்பட வேண்டாமா?” என்று கூறியுள்ளார்.

More News >>