தேர்தல் அதிகாரி மீது தாக்குதல்! காங்கிரசாருக்கும் அடி, உதை! ஒடிசாவில் பிஜேடி அக்கிரமம்!!

ஒடிசாவில் ஆளும் பிஜேடி கட்சி வேட்பாளரின் பண்ணை வீட்டை சோதனையிடச் சென்ற தேர்தல் அதிகாரிகள் மீது அக்கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதில் தேர்தல் அதிகாரிகள் பலத்த காயமடைந்தனர்.

ஒடிசாவில் முதலமைச்சர் நவீன்பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம்(பிஜேடி) கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு பூரி மாவட்டம், பிப்ளி சட்டமன்றத் தொகுதியில் பிஜேடி சார்பில் முன்னாள் அமைச்சர் பிரதீப் மகரத்தி போட்டியிடுகிறார். ஹன்கெய்பூர் என்ற கிராமத்தில் மகரத்தியின் பண்ணை வீடு உள்ளது. இங்கு கட்சிக்காரர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் மதுப்பாட்டில்கள் வழங்கப்படுவதாக நேற்று பறக்கும் படையினருக்கு தகவல் சென்றது.

இதையடுத்து, மாவட்ட வருவாய் அதிகாரியும், தொகுதி தேர்தல் அலுவலருமான ரவி நாராயன் பத்ரா தலைமையில் தேர்தல் ஊழியர்கள் மூன்று வாகனங்களில் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு திரண்ட மகரத்தியின் ஆதரவாளர்கள் திடீரென தேர்தல் அதிகாரிகளை உருட்டுக் கட்டைகளால் தாக்கினர். உடனே, அதிகாரிகள் அங்கிருந்து தப்பியோடினர். எனினும், அவர்களுக்கு பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக புவனேஸ்வரில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரவிநாராயண் பத்ரா கூறுகையில், ‘‘மகரத்தி ஆட்கள் அங்கு வந்து எங்களை உருட்டுக் கட்டைகளால் தாக்கினர். நாங்கள் வாகனங்களில் தப்ப முயன்ற போதும் பின்தொடர்ந்து வந்து தாக்கினர். நாங்கள் உயிர்தப்பியே அதிர்ஷ்டம்தான். மகரத்தி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

தேர்தல் அதிகாரி புகார் குறித்து மாவட்ட எஸ்.பி. கூறுகையில், ‘‘அந்த இடத்தில் மகரத்தியும் இருந்தாரா என்று விசாரித்து வருகிறோம். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ஏற்கனவே தலித் பெண் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் 2 குற்றவாளிகளை நீதிமன்றம் விடுதலை செய்த போது, ‘‘நீதி வென்றது’’ என்று பிரதீப் மகரத்தி் பேசியது பலத்த சர்ச்சையை கிளப்பியது. அப்போது அவரை மந்திரி பதவியில் இருந்து முதல்வர் நவீன் பட்நாயக் நீக்கினாரர். தற்போது மகரத்தி, தேர்தல் அதிகாரிகளை தாக்கியது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் மீது பிஜேடி வேட்பாளர் பத்ரி பாத்ராவின் ஆட்கள் சரமாரியாக தாக்கினர். இது தொடர்பாக, அவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதே போல், பா.ஜ.க. வேட்பாளர் ஜகன்னாத் பிரதான் பிரச்சாரத்தின் போது, பிஜேடி கட்சியினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். எனினும், பிரதானின் கார், குண்டு வீச்சில் இருந்து தப்பி விட்டது. மாநிலம் முழுவதுமே பிஜேடி கட்சியினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

மதுரை ஆட்சியர், தேர்தல் அதிகாரிகளை மாத்துங்க - தேர்தல் ஆணையத்துக்கு திமுக கூட்டணி தலைவர்கள் கோரிக்கை
More News >>