அமமுக அரசியல் கட்சியாக பதிவு - தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்யக் கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு செய்துள்ளார்.

அமமுகவை தொடங்கிய டிடிவி தினகரனுக்கு சின்னம் ஒரு பிரச்னையாக உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி தேடித் தந்த குக்கர் சின்னத்தை மீண்டும் பெற பல்வேறு இடையூறுகளைச் சந்திக்க நேரிட்டது.

இதற்கெல்லாம் காரணமாக அமமுகவை ஒரு கட்சியாகவே இன்னும் பதிவு செய்யவில்லை என்ற காரணத்தைக் கூறி, குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் பறித்துக் கொண்டது. கடைசியில் கட்சியாக பதிவு செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் கொடுத்த டிடிவி தினகரன், மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மட்டும் ஏதாவது ஒரு பொதுச் சின்னம் வேண்டும் என்று மன்றாடினார். இதனால் கடைசியில் பரிசுப் பெட்டகம் சின்னம் கிடைத்தது. குக்கர் சின்னமோ சுயேட்சைகளின் கைகளுக்குப் போய் இந்தத் தேர்தலில் அதுவும் இடையூறானது.

இந்நிலையில் தான் தேர்தல் முடிந்த அடுத்த கணமே அமமுகவில் விறுவிறுவென மாற்றங்கள் அரங்கேறின. துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்த டிடிவி தினகரன் பொதுச் செயலாளரானார். சிறையில் இருக்கும் சசிகலாவுக்காக கட்சியின் தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டிடிவி தினகரன் தரப்பில் அம முகவை கட்சியாக பதிவு செய்யக் கோரி டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. தினகரன் தரப்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் இதற்கான விண்ணப்பத்தை வழங்கியதுடன், அடுத்த மாதம் நடைபெற உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கும் பொதுவான சின்னம் வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்தார்.

அதிமுக.வை கைப்பற்றும் ஆசையை துறக்கிறாரா டி.டி.வி. தினகரன்?
More News >>