ஜெ. நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு! உச்சநீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி!!
ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று(ஏப்.22) தள்ளுபடி செய்தது.
சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 50 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, அவருக்கு அரசு சார்பில் நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணமாகி விடும் என்றும், கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஜெயலலிதாவின் அப்பீல்மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது அவர் உயிரிழந்து விட்டதால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டது என்றும், அதனால் அவர் குற்றவாளி இல்லை என்றும் தமிழக அரசு சார்பில் வாதாடப்பட்டது. மேலும், ஜெயலலிதா நினைவிடம் கட்டுவது அரசின் கொள்கை முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை மண்டலம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் அனுமதி பெற்று கட்டுமானப் பணிகள் நடப்பதாகவும் அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரவி, அப்பீல் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
ஓட்டுப் போடல..! ரூ1000 திருப்பிக் கொடு..! ஓபிஎஸ் மகன் தரப்பு கறார் வசூலா..? தேனியில் சுழன்றடிக்கும் சர்ச்சை