மோடி குறித்த விமர்சனம் - உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி

ரபேல் விவகாரத்தில் மோடியை திருடன் என உச்ச நீதிமன்றமே கூறி விட்டது என்பது போல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து கூறியிருந்தார். இது தொடர்பாக பாஜக தரப்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரபேல் தொடர்பான ஆவணங்கள் தி இந்து நாளிதழில் வெளியானது தொடர்பான வழக்கில், கடந்த 10-ந் தேதி நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இதில் ரபேல் தொடர்பான வழக்கு விசாரணையில் இந்து நாளிதழில் வெளியான ஆவணங்களும் ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

இந்தத் தீர்ப்பு குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காவலாளி என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடியை, உச்ச நீதிமன்றமே திருடன் என்று உறுதி செய்து விட்டது என்பது போல் பேசியிருந்தார். இதற்கு பாஜக தரப்பில் கடும் ஆட்சேபம் எழுந்தது. உச்ச நீதிமன்றம் கூறாததை கூறியதாக ராகுல் காந்தி எப்படி சொல்லலாம் என்று எதிர்ப்பு காட்டினர். மேலும் பாஜக எம்.பி.யான மீனாட்சி லேகி,ராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு இன்று நடந்த விசாரணையின் போது, தம்முடைய பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவிப்பதாக தெரிவித்தார்.

மேலும், தீர்ப்பு வந்த சமயம் தாம் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், தீர்ப்பின் முழு விபரங்களை படிக்காமல் அவசரத்தில் கூறிய கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்றும், தமது விமர்சனத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் ராகுல் காந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கேரளாவில் ராகுல் காந்திக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு!
More News >>