துடிக்கிறது மத்திய அரசு..இது தேவையில்லை..! டிடிவி தினகரன் கடும் ஆவேசம்

தமிழகத்தைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என மத்திய அரசை சாடியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

தமிழகத்தில் நாகை,கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வேதாந்தா நிறுவனம் 274 ஹைட்ரோகார்பன் கிணறுகளையும், ஓ.என்.ஜி.சி நிறுவனம் 67 ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் அமைக்கும் வருவாய் பங்கீட்டு ஒப்பந்தத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் கையெழுத்திட்டது.

அதன் அடிப்படையில், மொத்தம் 341 ஹைட்ரோகார்பன் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி பெறுவதற்கு சுற்றுச்சுழல் தாக்க அறிக்கை அவசியம். இதற்கான ஆய்வு எல்லைகளை வழங்கக்கோரி வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள், மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீடு குழுவிடம் கடந்த மார்ச் மாதம் விண்ணப்பித்து இருந்தது. இதையடுத்து, ஏப்ரல் மாதம் முதல் வாரம் 27 கிணறுகளுக்கான ஆய்வு எல்லைகளை மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கிய நிலையில், கடந்த 18ம் தேதி மேலும் 40 கிணறுகளுக்கான ஆய்வு எல்லைகளை வழங்கி உள்ளது.

இதற்குக் கண்டனம் தெரிவித்து உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘ஒரு பக்கம் தமிழகத்துக்கு ஒரு சொட்டு காவிரி தண்ணீர் கூட வரவிடாமல் தடுக்கும் மேகதாது அணைக்கு அனுமதி அளித்திருக்கிற மத்திய அரசு, இன்னொரு புறம் தமிழகத்தைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டத்தை செயல்படுத்துவதில் விடாப்பிடியாக இருக்கிறது. சோமாலியா நாட்டை போலவே தமிழகத்தை மாற்றத் துடிக்கிற இவர்களின் திட்டங்களை ஒருபோதும் இந்த மண்ணில் அனுமதிக்க முடியாது. இதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளப்படுவதை பழனிசாமி அரசு உடனடியாக தடுக்க வேண்டும்’ என்று மத்திய அரசைக் கண்டித்தும், தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் டிடிவி தினகரன்.  

அமமுக அரசியல் கட்சியாக பதிவு - தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு
More News >>