உள்ளாட்சி தேர்தல்: நீதிமன்றத்தில் குட்டு வாங்கியும் திருந்தாத தமிழக அரசு - மு.க.ஸ்டாலின் கண்டனம்
உள்ளாட்சித் தேர்தலை நடத்த, தமிழக அரசு மேலும் 3 மாத அவகாசம் கோரியிருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2016-ல் நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. கடந்த 2016 நவம்பரில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இட ஒதுக்கீடு பிரச்னையால் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறப்பட்டது.
அதன் பின், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு, உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆர்வம் காட்டவில்லை. தேர்தலை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடப்பட்டதில், தமிழக அரசு சாக்கு போக்குகளை கூறி காலம் கடத்திக் கொண்டே சென்றது. கடைசியாக அடுத்த மாதம் (மே மாதம்) தேர்தலை நடத்தி விடுவதாக தமிழக தேர்தல் ஆணையம் உறுதியாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அடுத்த மாதமும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இதனால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், இன்று நடந்த விசாரணையில் மேலும் 3 மாத காலம் அவகாசம் கோரியிருக்கிறது தமிழக தேர்தல் ஆணையம் .
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசின் ஊதுகுழலான தமிழக தேர்தல் ஆணையம் மேலும் 3 மாத காலம் அவகாசம் கோரியிருக்கிறது.
நீதிமன்றத்திலும் அரசும், தேர்தல் ஆணையமும் பலமான குட்டுகளை வாங்கியும் இன்னும் திருந்தவில்லை. தமிழகத்தில் மலைபோல் குவிந்திருக்கும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் அத்துமீறல்; திமுகவினர் உஷாராக இருக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்