சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஐபிஎல் பைனல் - சென்னைக்கு பதில் ஐதராபாத்துக்கு மாற்றம்
இந்த சீசனுக்கான ஐபிஎல் பைனல் போட்டி சென்னைக்குப் பதிலாக ஐதராபாத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதால், சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஐபிஎல் போட்டிகளின் லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப் போவது எந்த அணிகள் என்ற கூட்டல் கழித்தல் கணக்குகளை கிரிக்கெட் ரசிகர்கள் போட்டு வருகின்றனர். நடப்பு சாம்பியனான தோனி தலைமையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறையும் அபாரமாக ஆடி, புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இதனால் இம்முறையும் சாம்பியனாகும் என்ற எதிர்பார்ப்பில் சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர். இதனால் மே 12-ல் சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பைனல் போட்டியை காண இப்போதிருந்தே சிஎஸ்கே ரசிகர்கள் தயாராகி வந்தனர்.
இந்நிலையில் தான் பைனல் போட்டி சென்னைக்குப் பதிலாக ஐதராபாத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. போட்டியை இடமாற்றியதற்கு காரணம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள 3 காலரிகளுக்கு இன்னும் மாநகராட்சி அனுமதி கிடைக்காததே என்று கூறியுள்ளது பிசிசிஐ.இந்த 3 காலரிகளில் மொத்தம் 12 ஆயிரம் இருக்கைகள் காலியாக உள்ள நிலையில் இறுதிப் போட்டியை நடத்தினால், டிக்கெட் வருமானம் பல கோடி நஷ்டமாகி விடும் என்பதால் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டதாகவும் பிசிசிஐ கூறியுள்ளது.
ஆனாலும் ஆறுதல் விஷயமாக, சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் வந்தால் பிளே ஆப் சுற்றில் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் குவாலிபையர் போட்டி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி சென்னையில் மே 7-ந் தேதி நடைபெறுகிறது. மற்ற இரு பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் விசாகப்பட்டினத்தில் மே 8, 10 தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.