தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவோம் - சூட்டை கிளப்பும் அர்ஜூன் சம்பத்
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய பாட்டை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக கருணாநிதி அறிவித்தார். ஆனால் குமரக்குருபர் எழுதிய மீனாட்சி பிள்ளைத் தமிழ்தான் உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், “மீனாட்சி அம்மன் கோயில் பாதுகாப்புக் குழுவிடம் மத்திய, மாநில உளவுத்துறைகள் பலமுறை இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்க போவதை முன்கூட்டியே சொல்லியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
மீனாட்சி அம்மன் கோயிலை வசப்படுத்தி இருக்கும் அரசு, அரசியல்வாதிகளிடமிருந்து விடுதலையாக்கி கோயில் நிர்வாகத்தைத் தர்மகர்த்தாக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறோம்.
அதேபோல், வரும் 14-ம் தேதி காதலர் தினத்தைக் கண்டித்து போராட இருக்கிறோம். ஆபாச வாழ்த்து அட்டைகளை எரிக்க இருக்கிறோம். அது நமது கலாச்சாரத்தை சீரழிக்கும் நாள்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 1972-ம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய பாட்டை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்துவிட்டார். ஆனால், அது திராவிடத்தாய் பாட்டு. அந்தப் பாட்டு வரிகளில் கொஞ்சத்தை எடுத்துவிட்டு, தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றிவிட்டார்.
உண்மையில் குமரக்குருபர் எழுதிய மீனாட்சி பிள்ளைத் தமிழ்தான் உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து. இல்லை னா, பாரதியார் எவ்வளவோ தமிழ்த்தாய் வாழ்த்துகளை எழுதியுள்ளார். அதுதான் தமிழ்த்தாய் வாழ்த்து. நாங்க ஆட்சிக்கு வந்தால், இவற்றை தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றுவோம்.
கமல் தினமும் டிவிட் பண்ணி, அது சரியில்லை, இது சரியில்லை என்று மக்களை குழப்பி லாவனி அரசியல் பண்ணுகிறார். ஆனால், ரஜினிகாந்த் அமைதியாக நாகரீக அரசியல் பண்ணுகிறார். கட்சி தொடங்கியவுடன், அவர் ஸ்பீடாக மாறுவார். வரும் 2021-ம் ஆண்டு அவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று தெரிவித்துள்ளார்.