ரகானே அதிரடி சதம் வீண் ராஜஸ்தானை வென்றது டெல்லி அணி!
ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற 40வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஜெய்ப்பூரில் உள்ள சாவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8மணிக்கு தொடங்கிய 40வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரரான அஜின்கே ரகானே இறுதி வரை அவுட் ஆகாமல் 63 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகள் விளாசி 105 ரன்கள் எடுத்தார்.
சஞ்சு சாம்சன் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய நிலையில், களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ரகானேவுடன் பார்ட்னர்ஷிப் போட்டு அரைசதம் கடந்த நிலையில் அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த வீரர்கள் பெரிதாக ரன் ஏதும் எடுக்கவில்லை.
20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியில் துவக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா 42 ரன்களையும் ஷிகர் தவான் 54 ரன்களையும் விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யார் 4 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேற, விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 36 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் விளாசி 78 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் டெல்லி அணியை வெற்றியடைய செய்தார்.
19.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த டெல்லி அணி 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்புள்ளது.
ஹர்திக் பாண்ட்யாவின் ரகசியம் இதுதானாம்....!